மழையால் குண்டும், குழியுமான வி.கே.டி.சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


மழையால் குண்டும், குழியுமான வி.கே.டி.சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 1 Jan 2021 11:34 AM IST (Updated: 1 Jan 2021 11:34 AM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தால் சேதமடைந்த வி.கே.டி. சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

பண்ருட்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூருக்கு வி.கே.டி.என்னும் தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி ,நெய்வேலி, வடலூர் வழியாக வழியாக 4 வழிப்பாதையாக அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன்பு தமிழக நெடுஞ்சாலைத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த பழைய சாலையை தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியுள்ளது.

குண்டும், குழியுமாக...

ஆனால் இந்த சாலை சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் பல்வேறு இடங்களில் சேதமடைந்து விட்டன. பல்வேறு இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. சில இடங்களில் மண் சாலையாக மாறிவிட்டது.

கண்டரக் கோட்டையில் இருந்து நெய்வேலி ஆர்ச் கேட் வரை சாலை மிகவும் பழுதடைந்து விட்டது. வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துடன் அந்தசாலையைகடந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து காயத்துடன் செல்வதையும் பார்க்க முடிகிறது. போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் சாலை உள்ளதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

மண் சாலையாக மாறி உள்ளதால் புழுதி பறந்து, வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். கண்களில் மண் விழுந்து விபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கும், இது தவிர அந்த வழியாக உள்ள பல்வேறு ஊர்களுக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆகவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டு்ம் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர இந்த சாலையை விரைந்து சீரமைத்து வாகன ஓட்டிகளை விபத்தில்லாமல் காக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story