கடந்த ஆண்டில் 34 கொலைகள்: மோட்டார் வாகன வழக்குகளில் ரூ.5 கோடி அபராதம் வசூல் - வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்


கடந்த ஆண்டில் 34 கொலைகள்: மோட்டார் வாகன வழக்குகளில் ரூ.5 கோடி அபராதம் வசூல் - வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2021 4:13 PM IST (Updated: 1 Jan 2021 4:13 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 34 கொலைகள் நடந்துள்ளது. மோட்டார்வாகன வழக்குகளில் ரூ.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கடந்த ஆண்டு (2020) காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதது தொடர்பாக 19,034 வழக்குகள் உள்பட மொத்தம் 30,492 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2020-ம் ஆண்டு 34 கொலைகளும் 40 கொலை முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளது. கொலை வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

5 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை புகார்களின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டு 14 வழக்குகளும், 2020-ம் ஆண்டு 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

190 குற்ற வழக்குகளில் ரூ.3 கோடியே 44 லட்சம் பொருட்கள் திருட்டு போய் உள்ளது. அதில் 149 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 26 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. திருட்டை தடுக்க 505 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

348 பேர் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 263 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 2020-ம் ாண்டில் 72 மரண வழக்களும், 564 காய வழக்குகளும் பதிவாகி உள்ளது. விபத்தை தடுக்கும் பொருட்டு கடந்தாண்டு 4,41,896 மோட்டார்வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக சுமார் ரூ.5 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டை காட்டிலும் 2,59,727 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 805 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதில் 333 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

லாட்டரி சீட்டு விற்ற 76 பேர் கைது செய்யப்பட்டனர். 123 சூதாட்ட வழக்குகளும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 416 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 15,191 மனுக்கள் பெறப்பட்டு அதில் 14,660 மனுக்கள் மீது விசாரணை முடிக்கப்பட்டுள்ளன. 3,275 மதுவிலக்கு வழக்குகளில் 3,157 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்றதாக 49 பேர் கைது செய்யப்பட்டு 29 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story