புதிய நிர்வாகிகளிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு: இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட ‘சீல்' அகற்றம்


புதிய நிர்வாகிகளிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு: இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட ‘சீல் அகற்றம்
x
தினத்தந்தி 1 Jan 2021 5:16 PM IST (Updated: 1 Jan 2021 5:16 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. புதிய நிர்வாகிகளிடம், வேலூர் உதவி-கலெக்டர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

வேலூர்,

வேலூர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பெறப்படும் நிதி கணக்குகளை தணிக்கை செய்தபோது சில முரண்பாடுகள் காணப்பட்டது. மேலும் நிர்வாகி ஒருவர் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சங்க நிர்வாகக் குழு கலைக்கப்பட்டது.

பின்னர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும் சங்க கட்டுப்பாட்டில் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் செயல்படும் சேவா சமாஜ் அலுவலகம் மற்றும் சேவா சங்கத்தின் கீழ் காகிதப்பட்டறையில் இயங்கி வரும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டது. அவைத்தலைவராக உதவி கலெக்டர் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில நாட்களாக செஞ்சிலுவை சங்க பணிகள் முடங்கியதால் புதிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. அதன் அவைத்தலைவராக உதவி கலெக்டரும், நிர்வாகிகளாக பி.டி.கே.மாறன், கே.எஸ்.உதயசங்கர், விமல்சந்த் ஜெயின், காந்திலால்பட்டேல், சாம்கோ உதயசங்கர், உஷாநந்தினி உள்பட சிலர் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் செஞ்சிலுவை சங்க பணிகளை மேற்கொள்வதற்காக வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் நேற்று அண்ணாசாலையில் உள்ள அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு, பொறுப்புகளையும், சாவிகளையும் புதிய நிர்வாகிகளிடம் உதவி கலெக்டர் ஒப்படைத்தார். பின்னர் பணிபுரியும் பெண்கள் விடுதி மற்றும் சேவா சமாஜ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ அகற்றப்பட்டது.

அப்போது சங்க நிர்வாகி செ.நா.ஜனார்த்தனன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story