பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு அவமதிப்பா? விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை - கலெக்டர் கண்ணன் தகவல்
விருதுநகர் அருகே குருமூர்த்திநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்தில் பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு அவமதிப்பு நேர்ந்ததாக கூறப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் யூனியன், குருமூர்த்திநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி (வயது 37). பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் கலெக்டரிடம் கொடுத்த புகாரில், பஞ்சாயத்து துணைத்தலைவர் வரதராஜன் தன்னிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் அவமதிக்கிறார் என்றும், பஞ்சாயத்து ஆவணங்களை தர மறுக்கிறார் என்றும், இதுபற்றி கேட்டால் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் பஞ்சாயத்து தலைவர் இருக்கையில் அமர தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதன் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டார்.
நேற்று இது தொடர்பாக பஞ்சாயத்து அலுவலகத்தில் விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி காஜாமைதீன் வந்தே நவாஸ் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் கண்ணனிடம் கேட்டபோது, “பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை பெறப்பட்டுள்ளது. உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்ததாக பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கூறியதாக சொல்லப்படுகிறது. எனினும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story