மேலூர் அருகே காரில் கடத்திய 102 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
மேலூர் அருகே காரில் கடத்தி வந்த 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மதுரை நான்கு வழி சாலை சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனிப்பிரிவு ஏட்டு முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மதுரை நோக்கி வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அந்த காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி் அடைந்த போலீசார் தங்களது வாகனத்தில் அந்த காரை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். பின்னர் அந்த காரை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரினுள் சாக்லெட் மிட்டாய்கள் போல பாலித்தீன் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 102 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானியம் கிராமத்தை சேர்ந்தவ மாயி (வயது 55), ஈஸ்வரன் (28) ஆகியோர் என்பதும், திருச்சியில் இருந்து மதுரைக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 102 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story