பொங்கல் திருநாளுக்கு மண்பானை தயாரிப்பு மும்முரம்


பொங்கல் திருநாளுக்கு மண்பானை தயாரிப்பு மும்முரம்
x
தினத்தந்தி 1 Jan 2021 11:08 PM IST (Updated: 1 Jan 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில், தைப்பொங்கல் திருநாளுக்கு மண்பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உடுமலை,

தைப்பொங்கல் பண்டிகைக்கு மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். தைப்பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் உடுமலை பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உடுமலை காந்திநகர் எதிரே நாராயணன் காலனி பகுதியில் முன்பு 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்டங்களை செய்துவந்தனர். இந்த மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்து, மக்கள் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தத்தொடங்கிய பிறகு மண்பாண்டம் விற்பனை குறைந்தது. அதனால் உடுமலையில் ஒரே இடத்தில் மண்பாண்டங்களை செய்து வந்த தொழிலாளர்கள் பல்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றனர். இந்த நிலையில் சமீப காலமாக சிலர் மண்பாண்டங்கள் பயன்பாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில் உடுமலை அருகே உள்ள எஸ்.வி.புரத்தில் மண்பாண்டங்கள் செய்து வரும் தங்கவேல் கூறியதாவது:-

நாங்கள் பரம்பரை பரம்பரையாக மண்பாண்டங்களை செய்யும் தொழிலை செய்து வருகிறோம். இதற்கான வண்டல் மண் கிணத்துக்கடவு அருகில் உள்ள கோதவாடி பகுதியில் கிடைக்கிறது. இந்த மண் வாங்க மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று எடுத்து வருகிறோம். ஆண்டு ஒன்றுக்கு 1 டிராக்டர் அளவிற்கு மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. மண் இலவசமாக வழங்கப்பட்டாலும் மண் எடுப்பதற்கான ஆட்களுக்கு கூலி மற்றும் டிராக்டருக்கான வாடகை ஆகியவற்றிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் செலவாகிறது. இந்த மண்ணை 6 மாத காலத்திற்கு வைத்துக்கொள்வோம். இந்த மண்மூலம் பொங்கல்பானை, அடுப்பு, வடச்சட்டி, பூந்தொட்டி, பூவோடு போன்றவற்றை தயாரிக்கிறோம். அந்தந்த விசேஷ காலத்திற்கு தேவைப்படும் மண்பாண்டங்களை தயாரிக்கிறோம். கோவில் திருவிழாக்களின் போது பூவோடு விற்பனையும், வெயில்காலத்தில் மண்பானை, மண்குடம் விற்பனையும் அதிகம் இருக்கும். இவற்றை உடுமலை மத்திய பஸ் நிலையம் பகுதியிலேயே விற்பனை செய்து வருகிறோம்.

இப்போது பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் வைப்பதற்கான மண்பானை விற்பனை அதிகம் இருக்கும். அதற்காக இப்போது இந்த பொங்கல் மண்பானைகளை தயாரித்து வருகிறோம். சுழலும் சக்கரத்தின் மூலம் பானையை உருவாக்கி அதன்பிறகு கீழ்பகுதியை கைகளால் அடைத்து பானைக்கு முழு உருவம் கொடுக்கிறோம். அந்த பானை நன்றாக காய்ந்த பிறகு அதற்கு கலர் கொடுத்து விற்பனை செய்கிறோம்.

இந்த மண்பாண்டம் செய்வதற்குத்தேவையான மண், தேவைப்படும்போது வழங்க வேண்டும். இந்த தொழிலுக்கு அரசு தேவையான நிதி உதவி செய்ய வேண்டும். உடுமலை மத்திய பஸ்நிலையம் பகுதியில், மண்பாண்டங்களை விற்பனை செய்வதற்கு நிரந்தர கடை வைக்க இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story