கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே பேசுகிறார்கள் டி.கே.சிவக்குமார் சொல்கிறார்


கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே பேசுகிறார்கள் டி.கே.சிவக்குமார் சொல்கிறார்
x
தினத்தந்தி 2 Jan 2021 12:52 AM GMT (Updated: 2 Jan 2021 12:52 AM GMT)

கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே பேசுகிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஆளும் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களே ஆட்சி தலைமை மாற்றம் குறித்து பேசுகிறார்கள். ஆனால் முதல்-மந்திரி எடியூரப்பா தனக்குத்தானே பிரமாண பத்திரத்தை கொடுத்து கொள்கிறார். இதை பார்க்கும்போது, ஏதோ தவறு நடக்கிறது என்பது தெரிகிறது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்திருக்க வேண்டும். அவர்களை உள்ளே அனுமதித்துவிட்டு இப்போது தேடுகிறார்கள்.

ஆட்சி நிர்வாகத்தில் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதற்கு இதே சாட்சி. நாட்டில் கொரோனாவை பரவவிட்டதே மத்திய-மாநில அரசுகள் தான். தொடக்கத்திலேயே தீவிர நடவடிக்கை எடுத்து இதை கட்டுப்படுத்தி இருந்தால் இன்று இந்த மோசமான நிலை வந்திருக்காது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் தான் கர்நாடகத்தில் கொரோனா பரவியது. கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் எங்களுக்கு திருப்தியை தருவதாக உள்ளது.

இந்த தேர்தலில் பண பலம் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை பயன்படுத்தியது போன்றவற்றையும் மீறி எங்கள் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். இது கட்சிகள் அடிப்படையில் நடைபெறக்கூடிய தேர்தல் அல்ல என்றாலும், கிராம பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை கட்சி அரசியலை தவிர்க்க முடியாது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எங்கள் கட்சியினரை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தாலும், கிராம பஞ்சாயத்து தேர்தலில் எங்களுக்கு நல்ல முடிவு கிடைத்துள்ளது.

கிராமப்புற மக்கள் ஆபரேஷன் அரசியல் குறித்து கவலைப்படவில்லை. வருகிற 5-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளேன். வட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிய உள்ளேன். நடப்பு ஆண்டு காங்கிரசுக்கு கட்சியை பலப்படுத்தும் ஆண்டு. உள்ளூர் அளவில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, அவற்றை தீர்க்க நாங்கள் போராடுவோம்.

பள்ளிகளை திறக்க வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. ஆனால் பள்ளிகளில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்றலில் நீண்ட இடைவெளி இருந்தால், அது கல்வியின் தரத்தை பாதித்துவிடும். கல்வி என்பது அனைவரின் அடிப்படை உரிமை. அதனால் பள்ளிகளை திறப்பதை காங்கிரஸ் எதிர்க்காது. கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story