கர்நாடகத்தில் மைசூரு, சிவமொக்கா உள்பட 5 மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை


கர்நாடகத்தில் மைசூரு, சிவமொக்கா உள்பட 5 மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை
x
தினத்தந்தி 2 Jan 2021 6:26 AM IST (Updated: 2 Jan 2021 6:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 5 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு தொடங்குகிறது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு, 

இந்தியாவுக்குள் கொரோனா வைரஸ் நுழைந்து ஒரு ஆண்டை நெருங்குகிறது.
இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு ஜனவரி 2-ந்தேதி (அதாவது இ்ன்று) தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் நடப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

அதுபோல் கர்நாடகத்திலும் 5 மாவட்டங்களில் இன்று முதல் தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது. இதற்காக கர்நாடக அரசும், கர்நாடக சுகாதாரத்துறையும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. பெங்களூரு, பெலகாவி, மைசூரு, சிவமொக்கா மற்றும் கலபுரகி ஆகிய 5 மாவட்டங்களில் இந்த ஒத்திகையை நடத்த திட்டமிட்டுள்ளோம். சில மாநிலங்களில் 2 மாவட்டங்களில் மட்டுமே இந்த ஒத்திகை நடக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், 5 மாவட்டங்களில் ஒத்திகை நடக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 3 கட்டமாக இந்த ஒத்திகை நடக்கிறது. ஒவ்வொரு கட்டமாக தலா 25 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தேவையான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். தடுப்பூசி போடும்போது அனுசரிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் விளக்கப்படுகிறது.

தடுப்பூசி கிடைத்ததும் படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்படும். அதற்கு தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்துள்ளது. கர்நாடகத்தில் இன்று (நேற்று) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் குழந்தைகளுக்கு கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமை.

பள்ளிகளில் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது. மாணவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும். அது மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

இதில் பெங்களூருவில் இன்று 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த ஒத்திகை நடக்கிறது. பெங்களூருவில் காமாட்சிபாளையா நகர ஆரம்ப சுகாதார நிலையம், வித்யாபீட நகர ஆரம்ப சுகாதார நிலையம், ஆனேக்கலில் உள்ள ஹர்கதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அந்த 3 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் ஒத்திகையில் தலா 25 சுகாதார பணியாளர்கள் வீதம் 75 பணியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த ஒத்திகை குறித்த அறிக்கை மத்திய-மாநில அரசுகளுக்கு வழங்கப்படும். பெங்களூருவில் 1,517 சுகாதார நிலையங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசி வினியோகம் செய்யும் பணி இந்த மாத இறுதி அல்லது பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் தொடங்கும் என்று பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி கவுரவ் குப்தா கூறினார்.

Next Story