மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக 4 மாவட்டங்கள் தேர்வு சுகாதாரத்துறை மந்திரி தகவல்


மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக 4 மாவட்டங்கள் தேர்வு சுகாதாரத்துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 2 Jan 2021 6:39 AM IST (Updated: 2 Jan 2021 6:39 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

மும்பை, 

நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும், அது நிரந்தரமாக விடை கொடுப்பதில் தடுப்பூசிக்குத்தான் முக்கிய பங்கு உள்ளது. அந்த வகையில் உள்நாட்டில் கோவேக்சின், ஜைகோவ்-டி போன்ற தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவை இறுதிக்கட்ட மருத்துவ சோதனையில் உள்ளன.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி, இந்தியாவில் புனேயின் இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவி‌ஷீல்டு தடுப்பூசியும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

புத்தாண்டில் இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்தநிலையில் பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இந்தநிலையில் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இன்று (சனிக்கிழமை) ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் குறைந்தது 3 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசிக்காக மராட்டியத்தில் புனே, நாக்பூர், ஜல்னா, நந்தூர்பர் ஆகிய 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

இந்த தடுப்பூசி ஒத்திகையின் நோக்கம், தடுப்பூசி தொடர்பான பணிகளுக்காக திட்டமிடல் மற்றும் அதை செயல்படுத்துதலில் உள்ள தொடர்புகளை மதிப்பிடுதல், சவால்களை அடையாளம் காணுதல் உள்ளிட்டவை ஆகும்.

ஒத்திகை நடைபெறும் இடங்களில் போதுமான இடவசதி இருக்கிறதா, தளவாட ஏற்பாடுகள் உள்ளனவா, இணையதள வசதி உள்ளதா, மின்சார வினியோகம் சீராக உள்ளதா, பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story