தி.மு.க. ஆட்சி என்றைக்கும் ஏழை மக்களுக்கான ஆட்சியாக இருந்ததில்லை; மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க. ஆட்சி என்றைக்கும் ஏழை மக்களுக்கான ஆட்சியாக இருந்ததில்லை என மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தேர்தல் பிரசாரம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 6.15 மணிக்கு மதுரை வந்தார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வந்தார்.
விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, பாஸ்கரன், மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதே போல் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேட்டி எடுப்பதற்காக நிருபர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் நிருபர்களிடம் ‘அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என மட்டும் சிரித்தபடி கூறி விட்டு அங்கிருந்து, பிரசார வேனில் புறப்பட்டு வழிநெடுகிலும் திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு சென்றார்.
செங்கோல்
விமான நிலைய சாலையில் அமைத்திருந்த மேடையில், வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செங்கோல் வழங்கினார்.
இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
புத்தாண்டு தினத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் செல்வ செழிப்பு மிக்க ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இதுமக்களுக்கான அரசு. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை நிறைவேற்றும் அரசு.
மக்களுக்கு சேவை செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்திருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை வழங்க அ.தி.மு.க.விற்கு மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆட்சி அமைய வாய்ப்பளிக்க வேண்டும்.
தி.மு.க. பிரசாரம்
ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஆனால் தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரசாரங்களை செய்து வருகிறார். தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. அரசு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் என்ன தவறு உள்ளது? பொங்கல் நிதியை போன்று ஏழைகள் ஏற்றம் பெறும் திட்டங்களை தொடர்ந்து வழங்குவோம். இதில் எந்த தவறும் இல்லை. இது போன்ற பொங்கல் பரிசு திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் கொடுத்தது உண்டா?
தி.மு.க. ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சியாக இருந்ததாக சரித்திரம் இல்லை. தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியும், அவரது குடும்பம்தான் வாழ்ந்தது. அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களை மட்டுமே அதிகாரத்தில் உட்கார வைத்தார்கள். தி.மு.க.வில் சாதாரண தொண்டர்கள் யாரும் எந்த காலத்திலும், எந்த பதவிக்கும் வர முடியாது. அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் வரலாம்.
தி.மு.க.வில் வாரிசு அரசியல் தொடர்ந்து வருகிறது. கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்து மு.க.ஸ்டாலின் பேரனும் அரசியலுக்கு வர தயராக உள்ளார். தி.மு.க. நடத்தும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக வருகிற தேர்தல் அமையும். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நாட்டுக்காக வாழ்ந்து மறைந்தார்கள். இரு பெரும் தலைவர்களின் நல்ல பல திட்டங்கள் தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். புத்தாண்டு தினத்தில் என்னை மிக பிரமாண்டமாக வரவேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேராயரிடம் ஆசி
இந்த வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சொக்கிகுளத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமியிடம் ஆசி பெற்றார். அப்போது பாதிரியார்கள் உடன் இருந்தனர். நேற்று இரவில் அந்த விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் செல்கிறார். அவர் செல்லும் வழியில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மற்றும் கிழக்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதே போல் வழிநெடுகிலும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பரமக்குடி செல்லும் எடப்பாடி பழனிசாமி, காலை 9 மணி முதல் 9.45 மணி வரை பார்த்திபனூர் பகுதியில் கால்நடை பராமரிப்பவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதைதொடர்ந்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுடன் சுலந்துரையாடல் நடத்துகிறார். பகல் 11.15 மணி அளவில் பரமக்குடி லேனா திருமணமகாலில் நெசவாளர்கள், சிறுவணிகர்களுடன் உரையாடுகிறார்.
ராமநாதபுரம்-சாயல்குடி
பகல் 12.45 மணியளவில் திருவாடானை சட்டமன்ற தொகுதிய ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல், 1.45 மணிக்கு ராமநாதபுரம் ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை 4.45 மணிக்கு ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட திருப்புல்லாணி பகுதியில் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 6.15 மணியளவில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மரக்கரி தயாரிப்பவர்களுடனும், அதனை தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு சாயல்குடியில் பொதுக்கூட்டத்திலும், இரவு 8.30 மணிக்கு கன்னிராஜபுரம் பகுதியில் முக்கிய பிரமுகர்களுடனும் எடப்பாடி பழனிசாமி உரையாடுகிறார். பின்னர் தூத்துக்குடி மாவட்ட பிரசாரத்திற்கு செல்கிறார்.
Related Tags :
Next Story