ஆங்கில புத்தாண்டு தினம்: சிவகங்கை மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு


சுவாமி சந்தன காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
x
சுவாமி சந்தன காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
தினத்தந்தி 2 Jan 2021 3:36 AM GMT (Updated: 2 Jan 2021 4:11 AM GMT)

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

புத்தாண்டு பிறந்தது
2020-ம் ஆண்டு விைடபெற்று 2021-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லி கொண்டனர். வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்பி மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு கொேரானா தாக்கத்தால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் தற்போது பிறந்த 2021-ம் ஆண்டு அனைத்து மக்களும் நலம் பெற இறைவன் அருள்புரிய வேண்டும் என வேண்டிக்கொண்டனர். அதோடு கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

குன்றக்குடி கோவில்
அதன்படி குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்திருந்தார். இதேபோல் காரைக்குடி டி.டிநகர் கற்பகவிநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு கற்பகவிநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தங்க அங்கியில் பக்தர்களுக்கு கற்பகவிநாயகர் அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துகுருக்கள் செய்திருந்தார்.

மடப்புரம் கோவில்
இதேபோல் காரைக்குடியை அடுத்த வ.சூரக்குடி சிவஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு பச்சை ராமர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் முத்துராமன் செய்திருந்தார்.

இதேபோல் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் அடைக்கலம் அய்யனார், பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரியமாணிக்க பெருமாள் கோவில்
மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சொர்ணகாளீஸ்வரர் கோவில்
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலிலும் உருவாட்டி ஸ்ரீபெரியநாச்சி அம்மன் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.கல்லல் சோமசுந்தரம் சவுந்தரநாயகி அம்மன் கோவில், பெருமாள் கோவில், பாகனேரி சிவன் கோவில், புல்வநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Next Story