திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பரபரப்பு: நகைக்காக மூதாட்டி கொடூர கொலை
துவரங்குறிச்சியில் நகைக்காக மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மூதாட்டி கொடூர கொலை
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சந்தை பேட்டையை சேர்ந்த அப்துல் ரசாக்கின் மனைவி ஹபிபா பீவி (வயது 68). இவருடைய கணவர் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் ஹபிபா பீவி பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்துகொண்டு, தனியாக வசித்து வந்தார். வழக்கமாக காலையில் ஹபிபா பீவி தண்ணீர் பிடிக்க வருவார். நேற்று காலை அவர் வராததால், அருகில் உள்ளவர்கள், அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது ஹபிபா பீவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, ரத்தவெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
நகைகள் கொள்ளை
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, மூதாட்டியின் கழுத்தை அறுத்துள்ளதுடன், முகத்தையும் சேதப்படுத்தி கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. அத்துடன், அவர் அணிந்திருந்த 3 பவுன் நகை, செல்போன் ஆகியவை கொள்ைளயடிக்கப்பட்டிருந்தன.
தனிப்படை அமைப்பு
மேலும், மூதாட்டியின் அருகில் நைலான் கயிறு, கடப்பா கல், ஆக்சா பிளேடு ஆகியவை ரத்தக்கறையுடன் கிடந்தன. இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் குழு மற்றும் திருச்சியில் இருந்து மோப்பநாய் ஸ்பார்க் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
பின்னர், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியை கொலை செய்தது யார்?, நகைக்காக கொலை நடந்ததா? அல்லது கொலையை திசை திருப்ப நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே குற்றவாளிகளை பிடிக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story