கறம்பக்குடி பகுதியில் மஞ்சள் கொத்துகள் விளைச்சல் அமோகம்; நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு


கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் கொத்துகள் செழித்து வளர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.
x
கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் கொத்துகள் செழித்து வளர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 2 Jan 2021 10:41 AM IST (Updated: 2 Jan 2021 10:41 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி பகுதியில் மஞ்சள் கொத்துகள் அமோக விளைச்சல் கண்டுள்ளது. இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மங்கள பொருளான மஞ்சள்
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில், கலாசாரம் மற்றும் பண்பாடு சார்ந்து கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் திருநாள் ஆகும். இத்திருநாளில் பொங்கல் பானையில் மஞ்சள் கொத்துக்களை கட்டி வழிபடுவது தமிழர்களின் வழக்கம். நகரப்பகுதிகளில் கூட இன்றும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. உணவை மருந்தாக தந்த நமது முன்னோர்கள் மிகச் சிறந்த கிருமி நாசினியான மஞ்சளை வழிபாட்டுக்குரியதாகவும், உணவு பொருளாகவும் உருவாக்கிக் கொடுத்தனர். மஞ்சளை மறந்துவிட கூடாது என்பதாலேயே அனைத்து வழிபாடுகளிலும், விசேஷங்களிலும் மஞ்சள் மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

நல்ல விலை கிடைக்கும்
இந்நிலையில் கறம்பக்குடி தாலுகாவில் உள்ள மழையூர், கொண்டையன்பட்டி, திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, வெட்டன் விடுதி, ரெகுநாதபுரம், தட்டாவூரணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மஞ்சள் கொத்துகள் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. பொங்கல் திருநாளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இப்பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள மஞ்சள் கொத்துகள் நன்கு செழித்து வளர்ந்து உள்ளன.

கறம்பக்குடி பகுதி மண்ணின் தன்மைக்கு மஞ்சள் கிழங்குகள் அடர்த்தியாகவும், செழுமையாகவும் இருக்கும். இதனால் வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் கறம்பக்குடி மஞ்சள் கொத்துகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா பெரும் தொற்று மஞ்சளின் மகிமையை உலகறிய செய்து உள்ளது. மஞ்சள் உயிர்காக்கும் மருந்து என்பதை இளைய தலைமுறையினரும் உணர்ந்து இருப்பதால் இந்த ஆண்டு மஞ்சள் கொத்துகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு
இதுகுறித்து கறம்பக்குடியில் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், விழாக்களையும், பண்டிகைகளையும் அர்த்தம் உள்ளதாகவே உருவாக்கித் தந்த நமது முன்னோர்கள், ஆயிரக்கணக்கானோர் கூடி கலையும் திருவிழாக்களில் மஞ்சள் நீராட்டு விழாக்களை நடத்தினர். இதன்மூலம் தொற்றுநோய் பரவாமல் மக்களை காத்தனர். கொரோனாவுக்கு பின்தான் மஞ்சள் விவசாயிகளுக்கு தனி கவரவம் கிடைத்துள்ளது.

மஞ்சள் சாகுபடி செய்வதை நாங்கள் பாரம்பரியமாக செய்து வருகிறோம். வருவாய் அதிகம் இல்லை என்ற போதிலும் மங்கள பொருளை உற்பத்தி செய்கிறோம் என்ற ஆத்ம திருப்தி உள்ளது. தற்போது மஞ்சளுக்கு தேவை அதிகம் உள்ளதால் எங்கள் பகுதியில் இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. மழை நன்கு பெய்து விவசாயம் செழித்து உள்ளதால் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளோம் என்று கூறினார்.

Next Story