வெள்ளகோவிலில் பரிகார பூஜையின்போது பெண்ணை கொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது; ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்
வெள்ளகோவிலில் பரிகார பூஜையின் போது பெண்ணை கொன்ற வழக்கில் தேடப்பட்ட ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆடம்பர வாழ்க்கைக்கு நகை, பணம் கிடைக்கும் என்ற ஆசையில் கொன்றதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பரிகார பூஜை
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள மூலனூர் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவரது மனைவி ஈஸ்வரி (55). ஆறுமுகம் வெள்ளகோவில்-செம்மாண்டம்பாளையம் ரோடு பிரிவு அருகே பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களது மகன் உதயகுமார் (35). இவருடைய மனைவி செல்வராணி (34). உதயகுமார் தனது மனைவியுடன் பல்லடம் அருகே உள்ள சுல்தான்பேட்டையில் குடியிருந்தபடி நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. .
இதனால் உதயகுமாருக்கு வாரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக இவருடைய பெற்றோர் பரிகார பூஜை செய்ய முடிவு செய்தனர். அதன்படி தங்களுக்கு பழக்கமான வெள்ளகோவில், திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் (36) மூலம் கடந்த 30-ந் தேதி காலை 5 மணிக்கு பர்னிச்சர் கடையில் பரிகார பூஜை நடத்தினர். பூஜை முடிந்ததும் ஆறுமுகம்-ஈஸ்வரி தம்பதியை விழுந்து கும்பிடும்படி சக்திவேல் கூறினார்.
பெண் கொலை
அதன்படி அவர்கள் இருவரும் கீழே குனிந்து சாமி கும்பிடும் போது சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் இருவரையும் தலை மற்றும் நெற்றியில் ஓங்கி அடித்தார். இதில் ஈஸ்வரியின் பின்பக்க தலைப்பகுதி பலமாக தாக்கப்பட்டதால், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆறுமுகம் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் ஈஸ்வரி கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடி மற்றும் ஆறுமுகத்திடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கடையின் ஷட்டரை வெளிபக்கமாக பூட்டிவிட்டு சக்திவேல் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து ஆறுமுகம் கடையின் ஷட்டர் அருகே தவழ்ந்து வந்து, ஷட்டரை தட்டினார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் விரைந்து வந்து, கடை ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஆறுமுகம் காயம் அடைந்து கிடப்பதையும், ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தை சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கைது
இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள சக்திவேலை பிடிக்க காங்கேயம் துணைபோலீஸ் சூப்பிரண்டு தனராசு, வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், காங்கேயம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், விஜயபாஸ்கர், மாலா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் 6 பிரிவுகளாகப் பிரிந்து மதுரை, திருச்சி, மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சக்திவேலை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சக்திவேல் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த சக்திவேலை கைது செய்து வெள்ளகோவில் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில் போலீசில் சக்திவேல் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
திண்டுக்கல்
எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சின்னம்மாநாயக்கனூர் ஆகும். எனக்கும் வேடசந்தூர் காளஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (40) என்பவருக்கும் திருமணமானது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான் 2009-ம் ஆண்டு சின்னமாநாயக்கனூரில் இருந்து வெள்ளகோவில் பகுதிக்கு வந்து, இங்கேயே தங்கி லாரி ஓட்டி வந்தேன்.
அப்போது கள்ளங்கட்டுவலசு பகுதியில் ஒரு மில்லில் வேலை செய்த மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஞ்சிதாவை 2-வதாக திருமணம் செய்துகொண்டு வெள்ளகோவில் திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தேன். எனக்கும்- ரஞ்சிதாவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆடம்பரமாக வாழ...
மேலும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதற்கான வருமானம் என்னிடம் இல்லை. எனவே லாரி டிரைவராக இருந்தநான், கடன் வாங்கி சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தேன். இதிலும் பெரிதாக வருமானம் இல்லை. எனவே ஆட்டோ ஓட்டி ஒன்றும் சம்பாதிக்க முடியாது என நினைத்தேன். இதற்கிடையில் நான் வைத்திருக்கும் ஆட்டோவுக்கும், சொகுசு காருக்கும் மாத தவணை செலுத்த வேண்டும். அதற்கான பணம் என்னிடம் இல்லை. அப்போதுதான் ஆறுமுகம், தனது மகனுக்கு வாரிசு கிடைக்க, பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று பூஜை முடிந்ததும் ஆறுமுகமும், ஈஸ்வரியையும் விழுந்து கும்பிடும்போது சுத்தியலால் இருவரையும் தாக்கினேன். இதில் ஈஸ்வரி இறந்து விட்டார். பின்னர் அவருடைய கழுத்தில் கிடந்த 5 பவுன்நகையையும், ஆறுமுகம் வைத்து இருந்த ரூ.10 ஆயிரத்தையும் எடுத்து சென்று விட்டேன். இந்த நிலையில்தான் வாடிப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.
இவ்வாறு சக்திவேல் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சக்திவேலிடம் இருந்த 5 பவுன் தாலி கொடியையும், ரூ.8,500 மற்றும் பூஜைக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இ்வ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் அடைப்பு
கைதான சக்திவேலை காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு டி.பிரவீன்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து திருப்பூர் சிறையில் சக்திவேல் அடைக்கப்பட்டார்.
2009-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், கூம்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் சக்திவேல், தொடர்புடையவர் என்றும், 2017- ம் ஆண்டு, வேடசந்தூர் போலீஸ்நிலையம் பகுதியில் ஒரு வழிப்பறி கொள்ளையில் சக்திவேல் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story