குடியாத்தம் அருகே, காப்பு காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் ஆட்டை கொன்றதால் கிராம மக்கள் அச்சம் - வனத்துறையினர் தண்டோரா போட்டு எச்சரிக்கை
குடியாத்தம் அருகே காப்புக்காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை அவை அடித்துக்ெகான்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் வனச்சரகம் ஆந்திர மாநில எல்லை வரை 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இரவு நேரங்களில் பெரிய சிறுத்தை தனியாகவும் மற்றொரு சிறுத்தை குட்டிகளுடன் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சிறுத்தைகள் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி, அனுப்பு, துருகம், மூலகாங்குப்பம், தேவரிஷிகுப்பம், மயிலாடும்மலை, மேல்மாயில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிவதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
நேற்று முன்தினம் கே.வி.குப்பத்தை அடுத்த மூலகாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அரிச்சந்திரன் என்பவரது ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அதில் ஒரு ஆட்டை பெரிய சிறுத்தை ஒன்று அடித்துக்கொன்றுள்ளது.
இது குறித்து குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் பார்க்கதேஜா, உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு, வனவர் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் வனத்துறையின் ஏற்பாட்டில் துருகம், மூலம்காங்குப்பம், தேவரிஷிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் மாலையில் தண்டோரா மூலம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும், சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தங்களின் கால்நடைகளை இரவு நேரங்களில் பத்திரமாக வைத்திருக்கவும், தேவையில்லாமல் காப்புக்காடு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.
சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story