விழுப்புரம் போக்குவரத்து கழக பணிமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி 14 பேரிடம் ரூ.1 கோடி மோசடி - அரசு ஊழியர் கைது
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 14 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த அரசு ஊழியரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுந்தரேசன். இவருடைய மகன் மணிமாறன் (வயது 26). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த போது, அதே பள்ளியில் படித்த சீனியர் மாணவரான வேப்பூர் புதுகாலனியை சேர்ந்த துரைசாமி மகன் பாலசந்தர்(33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் நண்பர்களான பழகினோம். பின்னர் கடந்த 1.9.2019 அன்று பாலசந்தர் என்னை சந்தித்து தான் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனையில் 2016-ம் ஆண்டு முதல் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருவதாக கூறினார். மேலும் பணிமனையில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ளதாகவும், அதில் என்னை சேர்த்து விடுவதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய நான் அவர் கூறியபடி அவரிடம் ரூ.8 லட்சத்தை அவரது வங்கிக்கணக்கிலும், நேரிலும் கொடுத்தேன். இது தவிர என்னுடைய சித்தி விருத்தாசலத்தை சேர்ந்த கண்ணன் மனைவி சிவரஞ்சனியும் ரூ.8 லட்சத்தை கொடுத்தார்.
அதன்படி எங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதை பெற்ற நாங்கள் கடந்த 13.1.2020-ல் வேலைக்கு சென்றோம். அப்போது அங்கு இளநிலை உதவியாளர் பணியில் இருந்த பாலசந்தர் எங்களிடம் வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்கினார். பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போதைக்கு வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டார். ஆனால் ஒரு மாத சம்பளத்தை அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.18 ஆயிரத்து 500-யை எங்களுக்கு அனுப்பினார்.
இதனால் சந்தேகமடைந்த நாங்கள், இது பற்றி பணிமனையில் விசாரித்த போது, அவர் கொடுத்தது போலி பணி நியமன ஆணை என்று தெரிந்தது. இதேபோல் விருத்தாசலத்தை சேர்ந்த சபரிநாதன், தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த மகேஷ், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பாலகுமரன், சிறுபாக்கத்தை சேர்ந்த இலக்கியா, மஞ்சுளா, சின்னசேலம், புதுச்சேரியை சேர்ந்த சத்தியவாணி, சாமுண்டீஸ்வரி, வேப்பூரை சேர்ந்த அருண், மங்கலம்பேட்டையை சேர்ந்த பாலசந்தர், லீனா, பாலூரை சேர்ந்த சேதுபதி, பெண்ணாடத்தை சேர்ந்த சித்தார்த்தன் ஆகிய 12 பேரிடமும் எங்களை போல் ஆசை வார்த்தை கூறி வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கி உள்ளார்.
பின்னர் போலியான பணி நியமன ஆணையை தயார் செய்து வழங்கி, மொத்தம் 14 பேரிடமும் ரூ.1 கோடியே 3 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்துள்ளார். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை பெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா, சப்-இன்ஸ்பெக்டர்கள் லூயிஸ்ராஜ், அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலசந்தர் அவர்களிடம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பாலசந்தரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கணினி, பிரிண்டர், முத்திரை, செல்போன், ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story