அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சேலம் மாநகராட்சி, தெடாவூர் பேரூராட்சிக்கு விருது - மத்திய மந்திரி காணொலி காட்சி மூலம் வழங்கினார்


அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சேலம் மாநகராட்சி, தெடாவூர் பேரூராட்சிக்கு விருது - மத்திய மந்திரி காணொலி காட்சி மூலம் வழங்கினார்
x
தினத்தந்தி 2 Jan 2021 8:54 PM IST (Updated: 2 Jan 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சேலம் மாநகராட்சி, தெடாவூர் பேரூராட்சிக்கு விருதை மத்திய இணை மந்திரி ஹர்தீப் சிங் புரி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.

சேலம்,

சென்னையில் புதிய தொழில் நுட்பத்துடன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படும் லைட்ஹவுஸ் குடியிருப்பு திட்டப்பணிக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை மந்திரி (தனி பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி கலந்து கொண்டு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகள் சுயமாக வீடு கட்டிக்கொள்ளும் முறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் சேலம் மாநகராட்சிக்கு 3-வது இடத்துக்கான விருதையும், இந்திய அளவில் சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்ட தெடாவூர் பேரூராட்சிக்கான விருதையும் வழங்கி பாராட்டினார்.

மேலும், சிறந்த முறையில் வீடு கட்டியதற்காக சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பனங்காடு ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சித்ரா சரவணன் என்பவருக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் ததுர்கா சங்கர் மிஸ்ரா விருது வழங்கி கவுரவித்தார். இந்த விருதுகள் காணொலி காட்சி மூலமாக வழக்கப்பட்டது.

விழாவில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி காட்சி மூலமாக கலெக்டர் ராமன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ்மூர்த்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் மூலமாக பயனாளிகள் சுயமாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பயனாளிகள் சொந்தமாக நிலம் உள்ளவர்கள் மற்றும் கூரை, ஓட்டு வீடு உள்ளவர்களுக்கு 300 சதுர அடி அளவுள்ள வீடுகள் கட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் ரூ.2.10 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 616 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 12 ஆயிரத்து 90 வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாநகராட்சி மற்றும் உள்ளுர் திட்டக் குழும பகுதிகளில் மட்டும் 17 ஆயிரத்து 706 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 9 ஆயிரத்து 673 வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story