முத்துப்பேட்டை அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; ஓய்வுபெற்ற கால்நடை உதவியாளர் பலி - போலீசார் விசாரணை


முத்துப்பேட்டை அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; ஓய்வுபெற்ற கால்நடை உதவியாளர் பலி - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Jan 2021 9:08 PM IST (Updated: 2 Jan 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற கால்நடை உதவியாளர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெருவை சேர்ந்தவர் முகமது அலியார் (வயது70). ஓய்வுபெற்ற கால்நடை உதவியாளர். இவர் ஓய்வுபெற்றாலும் முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை முகமது அலியார் நாச்சிகுளம் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் உள்ள மாட்டிற்கு மருத்துவம் பார்த்துவிட்டு, முத்துப்பேட்டையை நோக்கி திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது வேதாரண்யத்திலிருந்து முத்துப்பேட்டை நோக்கி விமானப்படை வீரர்கள் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமதுஅலியாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முகமது அலியார் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஓய்வுபெற்ற கால்நடை உதவியாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story