பூட்டிய அறைக்குள் பிணத்தை வைத்து பிரார்த்தனை: பெண் போலீஸ் சாவை மறைத்த பாதிரியார் உள்பட 2 பேர் கைது - திண்டுக்கல் அருகே பரபரப்பு


பூட்டிய அறைக்குள் பிணத்தை வைத்து பிரார்த்தனை: பெண் போலீஸ் சாவை மறைத்த பாதிரியார் உள்பட 2 பேர் கைது - திண்டுக்கல் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jan 2021 10:11 PM IST (Updated: 2 Jan 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

பூட்டிய அறைக்குள் பிணத்தை வைத்து பிரார்த்தனை செய்து பெண் போலீஸ் சாவை மறைத்த பாதிரியார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாடிக்கொம்பு,

திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனியில் வசித்து வந்தவர் அன்னை இந்திரா (வயது 38). இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு ரட்சகன் (12), மெர்சி (8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவர் பால்ராஜூடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த அன்னை இந்திரா, கடந்த சில ஆண்டுகளாக தனது குழந்தைகள், அக்காள் வாசுகி (47) மற்றும் குடும்ப நண்பரான பாதிரியார் சுதர்சனம் (45) ஆகியோருடன் நந்தவனம்பட்டியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது.

இதனால் அவர் அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுப்பது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்த அவர் கடந்த 26-ந்தேதி பணிக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அவருடைய வீட்டுக்கு விசாரிப்பதற்காக சென்றனர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்த போது, பூட்டிய அறைக்குள் அழுகிய நிலையில் அன்னை இந்திரா பிணமாக கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த வாசுகி, பாதிரியார் சுதர்சனம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அன்னை இந்திரா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 7-ந்தேதி இறந்ததும், அவருடைய சாவை மறைத்த பாதிரியார், அன்னை இந்திரா மீண்டும் உயிர்த்தெழுவார் என்று கூறி 20 நாட்களுக்கு மேல் பிணத்தை வைத்து பிரார்த்தனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பாதிரியார் சுதர்சனம், வாசுகி ஆகியோர் மீது பெண் போலீஸ் இறப்பை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்தது, சிகிச்சை கொடுத்தால் உயிர் பிழைப்பார் என்று தெரிந்தும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்திருந்தது, நம்பிக்கை துரோகம் செய்தல், ஏமாற்றி பொருட்களை பறித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story