கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 2 Jan 2021 10:15 PM IST (Updated: 2 Jan 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக பல இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதனால் கடல் அலைகள் சற்று வேகமாக அடித்தது. இருந்தபோதிலும் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகு போக்குவரத்து இயக்கப்பட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் நேற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடனும் காணப்பட்டது. கடல் அலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் எழுந்து வந்து கரையில் இருந்த பாறைகளின் மீது ஆக்ரோஷமாக மோதி சிதறியது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், புத்தாண்டு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் ஏற்கனவே அனைத்து படகுகளும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் கடற்கரை பகுதிகளான சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, வாவத்துறை புதுகிராமம், சிலுவைநகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்தபடி இருந்தது.

இதன் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அனைத்து கடற்கரை கிராமங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story