காங். எம்.எல்.ஏ. ஆதரவாளரை சுட்டுக்கொல்ல முயன்ற வாலிபர் கைது காதலியை திருமணம் செய்ய முயன்றதால் வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலம்
பெலகாவி அருகே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளரை சுட்டுக்கொல்ல முயன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். தனது காதலியை எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் திருமணம் செய்ய முயன்றதால் வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
பெலகாவி,
பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா எமகனமரடி கிராமத்தை சேர்ந்தவர் பர்மா துபடல். இவர் எமகனமரடி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஷ் ஜார்கிகோளியின் ஆதரவாளர் ஆவார். இந்த நிலையில் கடந்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி எமகனமரடி கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நின்று கொண்டு இருந்த பர்மா துபடல் உள்பட 2 பேரை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு காயம் அடைந்த 2 பேரும் பெலகாவி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
முன்னதாக சம்பவம் குறித்து பர்மா துபடல் அளித்த புகாரின்பேரில் எமகனமரடி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் மர்மநபரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தனர். அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பர்மா துபடலை கொலை செய்ய முயன்றதாக விநாயக் சோமசேகர் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
அதாவது விநாயக்கும், பர்மாவின் உறவுக்கார பெண் ஒருவரும் காதலித்து வந்து உள்ளனர். ஆனால் விநாயக் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து வைக்க பெண்ணின் பெற்றோர் மறுத்து விட்டனர். இதுபற்றி பர்மாவுக்கு தெரியவந்தது.
அப்போது அவர் விநாயக் காதலித்த உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்து உள்ளது. பர்மா உயிருடன் இருந்தால் தனக்கு காதலி கிடைக்க மாட்டார் என்று எண்ணிய விநாயக், பர்மாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து உள்ளார். அதன்படி கடந்த 16-ந் தேதி பர்மாவை விநாயக் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story