பிரதமர் மோடியின் ஆசைப்படி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க கர்நாடக அரசு நடவடிக்கை முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி


பிரதமர் மோடியின் ஆசைப்படி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க கர்நாடக அரசு நடவடிக்கை முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 3 Jan 2021 5:08 AM IST (Updated: 3 Jan 2021 5:08 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் ஆசைப்படி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பாகல்கோட்டை தோட்ட கலைத்துறை பல்கலைக்கழகம் சார்பில், பாகல்கோட்டையில் நேற்று தோட்ட கலைத்துறை கண்காட்சி மற்றும் விற்பனை மேளா தொடங்கியது. இந்த கண்காட்சியை பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று காலையில் தொடங்கி வைத்தார்.

பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் தோட்ட கலைத்துறையின் வளர்ச்சிக்காக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தோட்ட கலைத்துறையில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்துவதற்கான பணிகளும் நடந்து வருகிறது. தோட்ட கலைத்துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், அதற்கு தேவையான வளர்ச்சிகளையும் செய்வதற்கும் அரசு தயாராக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தான் 100-வது கிசான் ரெயிலை தொடங்கி வைத்திருந்தார். 3 மாதத்தில் கிசான் ரெயில் திட்டம் மூலமாக 27 ஆயிரம் டன் விவசாய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விரைவில் அழுக கூடிய மாதுளை உள்ளிட்ட பழங்களை கிசான் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களை மற்ற மாநிலங்களுக்கு எளிதில் அனுப்பி வைக்கவும், விற்பனை செய்யவும் கிசான் ரெயில் திட்டம் விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது. தோட்ட கலைத்துறை இந்த திட்டத்தின் மூலம் அதிக பயனடைகிறது. ஒவ்வொரு விவசாயிகளும் கிசான் ரெயில் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தோட்ட கலைத்துறையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கர்நாடகம் முன் மாதிரியாக விளங்குகிறது. இன்னும் முன்னேற்றம் அடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தோட்ட கலைத்துறைக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அவா்கள் லாபம் அடையவும் தேவையான புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், ஆதாயத்தை பெருக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் ஆசையாகும். பிரதமரின் ஆசை மற்றும் கனவை நிறைவேற்றும் விதமாக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்காக தேவையான நிதியை அரசு ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், தோட்ட கலைத்துறை மந்திரி நாராயணகவுடா கலந்துகொண்டனர்.

Next Story