திருவள்ளூர் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சாவு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா நல்லப்ப நாயுடு கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்மந்தடி. இவரது மகன் ரகு (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பள்ளிப்பட்டு சென்றார். வேலை முடிந்ததும் இரவு அவர் வீட்டுக்கு திரும்பிச்சென்று கொண்டிருந்தார்.
கர்லம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் பால் நிறுவனம் எதிரே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரகுவை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி பூர்ணிமா பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த ரகுவுக்கு பூர்ணிமா என்ற மனைவியும் ஸ்வேதா என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
மற்றொரு விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் ரகு. இவரது மகன் தனுஷ்குமார் (18). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனுஷ்குமார் வேலையை முடித்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான விக்னேஷ் குமார் என்பவருடன் மப்பேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை தனுஷ்குமார் ஓட்டிச்சென்றார்.
விக்னேஷ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் திருவள்ளூரை அடுத்த கல்லபேடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதைத்தொடர்ந்து தினேஷ்குமார் திடீரென பிரேக் பிடித்தார். இதில் அந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த தனுஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். விக்னேஷ்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிகக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story