பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற நிதி உதவி: மும்பை தாக்குதல் சதிகாரன் லக்வி கைது
பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு நிதி உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் மும்பை தாக்குதல் சதிகாரன் லக்வி கைது செய்யப்பட்டார். சர்வதேச அழுத்தத்தால்தான் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மும்பை,
இந்தியாவின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பையை நிர்மூலமாக்க வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடந்த 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்தனர். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர். இவற்றில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 9 பேர், நமது பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இளம்பயங்கரவாதி அஜ்மல் கசாப் உயிருடன் பிடிக்கப்பட்டு, வழக்கு விசாரணை நடத்தி, மரண தண்டனை விதித்து தூக்கில் போடப்பட்டார்.
இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் இருந்து கொண்டு மூளையாக செயல்பட்டு, வழிநடத்திய சதிகாரன் ஜாகி உர் ரகுமான் லக்வி. இவர் பாகிஸ்தானில் மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, 2015-ம் ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதியும் ஆவார்.
61 வயதான லக்வி, லாகூரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண பயங்கரவாத தடுப்பு படை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பஞ்சாப் பயங்கரவாத தடுப்பு படை நடத்திய உளவுத்துறை தகவல் அடிப்படையிலான நடவடிக்கையை தொடர்ந்து, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஜாகி உர் ரகுமான் லக்வி, பயங்கரவாத நிதி உதவி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்வி ஒரு மருந்தகம் நடத்தி வருகிறார். அதன் மூலம் கிடைக்கிற நிதியை பயங்கரவாத செயல்களுக்காக பயன்படுத்தி உள்ளார். லக்வி தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர். அத்துடன் அவர் ஐ.நா. சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் ஆவார். இவர் மீதான வழக்கு விசாரணை, லாகூர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல்களைத்தொடர்ந்து லக்வி, உலகளாவிய பயங்கரவாதி என ஐ.நா. சபையால் (2008 டிசம்பர்) பிரகடனம் செய்யப்பட்டவர் ஆவார்.
தன் மண்ணில் இயங்கிக்கொண்டு, எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிற பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தந்த அழுத்தத்தைத் தொடர்ந்துதான், லக்வியை பாகிஸ்தான் கைது செய்துள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story