பிரதமர், கவர்னருக்கு எதிராக மக்களை தவறாக வழிநடத்துவதை தவிர்க்கவேண்டும் நாராயணசாமிக்கு, கிரண்பெடி வேண்டுகோள்


பிரதமர், கவர்னருக்கு எதிராக மக்களை தவறாக வழிநடத்துவதை தவிர்க்கவேண்டும் நாராயணசாமிக்கு, கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Jan 2021 6:20 AM IST (Updated: 3 Jan 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர், கவர்னருக்கு எதிராக மக்களை தவறாக வழிநடத்துவதை முதல்-அமைச்சர் தவிர்க்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கவர்னரின் அலுவலக செயல்பாட்டிற்கு எதிராக முதல்-அமைச்சர் வெளிப்படுத்திய வேதனையையும், ஏமாற்றத்தையும் நான் புரிந்துகொள்கிறேன். வரும் வாரத்தில் போராட்டம் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக சட்டங்கள் மற்றும் விதிகளை கவர்னரின் அலுவலகம் கடுமையாக பின்பற்றி நியாயமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய நிர்வாகத்தை உறுதி செய்துள்ளது. இது விடாமுயற்சியின் காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

கவர்னரின் இந்த பொறுப்புகள் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளன. கவர்னர் என்பவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்.

புதுவை அரசின் நிதி செலவினம், அதன் அங்கீகரிக்கப்பட்ட பட்ஜெட் போன்றவை இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பதை உறுதி செய்துள்ளன. இதற்காக தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் பிற செயலாளர்கள் சேவை செய்துள்ளனர்.

கொரோனா மேலாண்மை, புயல் போன்றவற்றின்போது மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். கவர்னரின் பணிகள் வெளிப்படையாக நடக்கின்றன. இதில் யூனியன் பிரதேசம், இந்திய அரசின் ஒருங்கிணைப்புக்கான கட்டாய தேவையை உணர்ந்தபோது நான் தனிப்பட்ட முறையில் தலையிட்டேன். கவர்னர் ஒரு நியாயமான மற்றும் நிர்வாகத்தை உறுதி செய்வதில் கடமைப்பட்டவர். இதற்காக புதுவை மக்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

ஊரடங்கின்போது மதுவிற்பனையில் நடந்த விதிமுறை மீறல் தொடர்பாக ஒரு எம்.எல்.ஏ. புகார் தெரிவித்தார். இது சி.பி.ஐ. விசாரணையின் கீழ் உள்ளது. நான் ஒரு நிர்வாகியாக எனது பணிகளை செய்கிறேன். இந்திய அரசின் உத்தரவின்படி சட்டம் மற்றும் விதிகளை உறுதி செய்கிறேன்.

பிரதமர் மற்றும் கவர்னருக்கு எதிராக புதுச்சேரி மக்களை தினமும் தவறாக வழிநடத்துவதை தவிர்க்குமாறு முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசிடமிருந்து புதுவை யூனியன் பிரதேசம் எவ்வளவு பெற்றுள்ளது என்பதை மறந்துவிடுகிறார். ஏராளமான மத்திய அரசின் திட்டங்கள், லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு இலவச அரிசி வழங்கி உள்ளது. பல்வேறு திட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் டெண்டர்கள், ஒப்பந்தங்கள், கமி‌‌ஷன் ஏஜெண்டுகள், இழப்பீடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இது ஊழலை தடுப்பதற்கான பெரிய வழியாகும். இது உள்ளூர் பொருளாதாரத்துக்கு பெரிய ஊக்கமாகும். இது புதுவை மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story