களக்காடு தலையணை மூடல்: சிவபுரம் கால்வாயில் குவியும் சுற்றுலா பயணிகள்
களக்காடு தலையணை மூடப்பட்டதால் சிவபுரம் கால்வாயில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.
தலையணை மூடல்
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தலையணை மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு சுற்றுலா தலங்கள் விதிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் களக்காடு தலையணை மட்டும் 9 மாதங்களாக திறக்கப்படவில்லை.
இதனால் களக்காடு வரும் சுற்றுலா பயணிகள் தலையணைக்கு மாற்றாக அருகில் உள்ள சிவபுரம் கால்வாயில் குவிந்து வருகின்றனர். தலையணைக்கு அருகே மலையடிவாரத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தை சுற்றிலும் நாங்குநேரியான் கால்வாய், சீவலப்பேரியான் கால்வாய், பச்சையாறு ஆகிய 3 நீரோடைகள் ஓடுகின்றன. இதையடுத்து சுற்றுலா பயணிகள் சிவபுரத்தில் குவிந்து வருகின்றனர். வேன், கார்களில் நண்பர்கள், குடும்பத்தினர்களுடன் வரும் அவர்கள் அங்குள்ள கால்வாய்களில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
சுற்றுலா பயணிகள்
விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சிவபுரத்தில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், களக்காடு, தலையணை போலவே இங்கு ஓடும் தண்ணீரும் குளுமையுடன் உள்ளது. இதில் குளிக்கும் போது, உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி பிறக்கிறது என்றார். மலை கிராமமாக இருந்தாலும் சிவபுரம் வனத்துறை எல்கைக்கு வெளியே உள்ளதால் இங்கு செல்ல நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதுபோல வனத்துறையினரின் கெடுபிடிகள் கிடையாது என்பதாலும் சுற்றுலா பயணிகள் சிவபுரத்திற்கு செல்ல ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story