பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 நாட்கள் வேதாரண்யத்தில் இருந்து தஞ்சை ராஜராஜசோழன் நினைவிடம் நோக்கி விவசாயிகள் பயணம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 நாட்கள் வேதாரண்யத்தில் இருந்து தஞ்சை ராஜராஜசோழன் நினைவிடம் நோக்கி விவசாயிகள் பயணம்
x
தினத்தந்தி 3 Jan 2021 2:28 AM GMT (Updated: 3 Jan 2021 2:28 AM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேதாரண்யத்தில் இருந்து தஞ்சை ராஜராஜசோழன் நினைவிடம் நோக்கி விவசாயிகள் பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

திருத்துறைப்பூண்டி,

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினார். இதில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு விவசாயிகளுடைய போராட்டத்தையும், உயிரிழப்புகளையும் மதிக்க தவறுகிறது. விவசாயிகள் சாவுக்கு பிரதமர் மோடி பொறுப்பு ஏற்க வேண்டும்.

நாளை(திங்கட்கிழமை) நடக்கும் பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் கைவிடப்படும் என்ற உத்தரவாதத்தை பிரதமர் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு நெல்குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகள் பயணம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9,10-ந்தேதிகளில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு இல்லத்திலிருந்து விவசாயிகள் தஞ்சை ராஜராஜசோழன் நினைவிடத்தை நோக்கி நெடும் பயணம் மேற்கொள்ள உள்ளனர். வரும் வழியில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை நகரங்களில் விவசாயிகள் பேரணி சென்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில பொருளாளர் ஸ்ரீதர், மாநில கவுரவ தலைவர் நீலன் அசோகன், துணைச்செயலாளர் செந்தில்குமார், திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் அக்ரி அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story