அறிவியல் பூர்வமாக முயற்சி செய்து சித்த மருத்துவத்தை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் பேச்சு


அறிவியல் பூர்வமாக முயற்சி செய்து சித்த மருத்துவத்தை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 3 Jan 2021 9:22 AM IST (Updated: 3 Jan 2021 9:22 AM IST)
t-max-icont-min-icon

சித்த மருத்துவத்தை உலக அளவில் கொண்டு செல்ல அறிவியல் பூர்வமாக முயற்சி செய்ய வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

நாகர்கோவில்,

4-வது தேசிய சித்த மருத்துவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தேசிய சித்த மருத்துவ தினமானது, பதினெண் சித்த மருத்துவர்களில் முதன்மையானவரான அகத்திய முனிவரின் பிறந்த தினம், மார்கழி மாதத்திலுள்ள ஆயில்யம் நட்சத்திரத்தை கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தேசிய சித்த மருத்துவ விழா மற்றும் சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி, இயக்கம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடந்தது. இதனை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

300 நோயாளிகள் சிகிச்சை

கொரோனா காலத்தில் சித்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் குடும்ப சூழ்நிலைகள், தன்நலன் ஆகியவற்றை பார்க்காமல் அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். உங்கள் அனைவரையும் மிகவும் பாராட்டுகிறேன். சித்த மருத்துவம் என்பது வருமுன் காப்போம் என்பதே ஆகும். நோய் வந்தபின் சிகிச்சை எடுத்துக்கொள்வதை விட, நோய் வராமல் தடுப்பதுதான் சிறந்தது.

அவ்வாறு நோய் வராமல் தடுப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு மிகவும் அதிகம். கொரோனா காலத்தில் நோய் பரவாமல் தடுப்பதிலும், எதிர்பாற்றலை உருவாக்குதிலும் சித்த மருத்துவம் அதிகளவில் பயன்பட்டது. நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் செயல்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் 300 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.

யோகா பயிற்சி

கொரோனா காலத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள நோயாளிகளுக்கு கபசுரக்குடிநீர், ஆரோக்கிய பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக யோகா பயிற்சி, முத்திரை பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டது. ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ முறைகளை கடைபிடிக்கவும், நீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்கவும், உணவு உண்டபின் சிறிது தூரம் நடக்கவும் வேண்டும். அருகிலுள்ள இடங்களுக்கு செல்லும்போது வாகனங்ளை தவிர்த்து, நடந்து செல்ல வேண்டும்.

கொரோனா பரவல் காலத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு என்பது தேசிய சித்த மருத்துவ தினத்தின் கருப்பொருளாகும். கொரோனா தொற்றுக் காலத்தில் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீரை மக்கள் அனைவரும் பயன்படுத்தி, கொரோனா நோயிலிருந்து தற்காத்துக்கொண்டார்கள். இன்றைய தேசிய சித்த மருத்துவ தினத்தில் மூலிகை கண்காட்சிகள், கோவிட் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அகமருந்துகள், புறமருந்துகள், மலர் மருத்துவம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகள், சிறுதானியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில்...

மருத்துவதுறையில் அலோபதி மருத்துவமுறை இருந்தாலும், சித்த மருத்துவமுறை அதிகளவில் பயன்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்ல அறிவியல் பூர்வமாக முயற்சி செய்ய வேண்டும். சித்த மருத்துவத்தின் பயன்கள் அனைத்து பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் மேலும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் பேசினார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு, கலெக்டர் அரவிந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

விழாவில் மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி மேபல் அருள்மணி, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துக்கல்லூரி மருத்துவமனை டீன் கிளாரன்ஸ் டேவி, உதவி சித்த மருத்துவ அதிகாரிகள் மீனா (நடுவூர்கரை), சுரே‌‌ஷ் (அகஸ்தீஸ்வரம்), அனிதா (வெள்ளிச்சந்தை), உதவி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story