அழகப்பபுரத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சாவு


அழகப்பபுரத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சாவு
x
தினத்தந்தி 3 Jan 2021 9:27 AM IST (Updated: 3 Jan 2021 9:27 AM IST)
t-max-icont-min-icon

அழகப்பபுரத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

அழகப்பபுரம்,

அழகப்பபுரம் ஸ்டார் லேன் தெருவை சேர்ந்தவர் பிராங்கிளின் வளன் அரசு. இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இவருடைய மகன் அன்பரசு இம்மானுவேல் (வயது 9), மும்பையில் ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

மும்பையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிராங்கிளின் வளன் அரசு குடும்பத்துடன் அழகப்பபுரத்துக்கு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி சிறுவன் அன்பரசு இம்மானுவேல் தன்னுடைய நண்பர்களுடன் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது பந்து மாடியில் விழுந்ததாக தெரிகிறது. அதை எடுக்க சென்ற போது சிறுவன் எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

சாவு

இதில் அன்பரசு இம்மானுவேல் படுகாயமடைந்தான். உடனே அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அன்பரசு இம்மானுவேல் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிராங்கிளின் வளன் அரசு தனது குடும்பத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பைக்கு திரும்பி செல்ல திட்டமிட்டு இருந்தார். அதற்குள் அவருடைய மகன் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story