மூங்கில்துறைப்பட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்படும் பொதுமக்கள்


மூங்கில்துறைப்பட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல்படும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 Jan 2021 4:04 AM GMT (Updated: 3 Jan 2021 4:04 AM GMT)

மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடு்த்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மூங்கில்துறைப்பட்டு. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லை பகுதியாகவும் உள்ள இங்கு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1, வங்கிகள், போலீஸ் நிலையம் ஆகியவை உள்ளன. மேலும் சுற்றுவட்டாரத்தின் மையப் பகுதியாக விளங்கி வருவதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக மூங்கில்துறைப்பட்டு விளங்கி வருகிறது.

இங்குள்ள பழையூர், மோகன் நகர், காமராஜர் நகர், அண்ணாநகர், தேவி நகர், மோட்டூர், கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, பொரசப்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இப்பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு வணிக வளாகங்கள் அதிகஅளவில் இருப்பதால் கடைகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து வரும் குப்பைகள் மூங்கில்துறைப்பட்டு பயணிகள் நிழற்குடை அருகில் மலைபோல் கொட்டிக் கிடக்கின்றது. அதில் பன்றிகள், நாய்கள் அதிகளவில் மேய்வதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் போதிய கால்வாய் வசதி இல்லாததால் சாலை மற்றும் தெரு ஓரங்களில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து எங்கே மலேரியா, யானைக்கால் போன்ற கொடிய நோய்கள் தொற்றிக்கொள்ளுமோ? என்ற அச்சமும் பொதுமக்களிடம் உள்ளது.இது ஒருபுறம் இருக்க தற்போது இருக்கின்ற கால்வாய்களை தூர்வாரததால் கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுவதையும் பார்க்க முடிகிறது. இது சாலையில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது. பொதுகழிப்பறை இல்லாததால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இயற்கை உபாதைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமைப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலை வளாக ஓரத்தில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி அரசியல் கட்சியினர் , பொதுநல அமைப்பினர் போராட்டம் நடத்தியும் பலன் இலலை என கூறப்படுகிறது. இதனால் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் ஊராட்சி இருப்பதால் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அதிகாரிகள் யாரும் செவி சாய்ப்பது இல்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகும் இப்பகுதியின் வளர்ச்சி எந்த விதத்திலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் புகார்மனு கொடுத்தால் நேரில் வந்து விசாரித்துவிட்டு செல்கிறார்களே தவிர அந்த கோரிக்கையை நிறைவேற்றுதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடு்த்து வருகின்றனர்.

Next Story