விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 10,737 பேர் எழுதுகின்றனர்


விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 10,737 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 3 Jan 2021 9:36 AM IST (Updated: 3 Jan 2021 9:36 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 10,737 பேர் எழுதுகின்றனர். இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 69 துணை ஆட்சியர் நிலையிலான பணியிடங்களை நிரப்பிடும் வகையில் குரூப்-1 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 39 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள குரூப்-1 தேர்வை எழுதுவதற்காக 10,737 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாவண்ணம் தேர்வு கூடங்களை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையில் 3 பறக்கும் படை அலுவலர்கள், தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 7 நடமாடும் குழுக்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னேற்பாடு பணிகள்

இந்நிலையில் இத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி தேர்வுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை கேட்டறிந்து சில அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் தேர்வர்கள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு தரைத்தளத்தில் தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, காற்றோட்டமான வசதி, தடையில்லா மின்சார வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்திட வேண்டும் என்று முதன்மை கண்காணிப்பு அலுவலர்களுக்கும், மின்வாரியத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். மேலும் தேர்வர்கள் எவ்வித சிரமமும் இன்றி தேர்வு எழுதிடவும், தேர்வு சுமூகமாக நடைபெறவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தேர்வு நடத்த தயார் நிலையில் உள்ளது என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிரு‌‌ஷ்ணன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பு செயலாளர், தேர்வாணைய பிரிவு அலுவலர்கள், துணைப்பிரிவு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story