விழுப்புரம் பகுதியில் பொங்கல் கரும்புகள் அறுவடை பணி தொடங்கியது


விழுப்புரம் பகுதியில் பொங்கல் கரும்புகள் அறுவடை பணி தொடங்கியது
x
தினத்தந்தி 3 Jan 2021 9:39 AM IST (Updated: 3 Jan 2021 9:39 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் பகுதியில் இருந்து கரும்புகளை அறுவடை செய்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

விழுப்புரம்,

உலகெங்கும் உள்ள தமிழர்களால் வருகிற 14-ந்தேதி(வியாழக்கிழமை) தைதிருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு முக்கியம் இடம் உண்டு.

இந்த பன்னீர் கரும்புகளை வழங்குவதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, விழுப்புரம் அருகே உள்ள பிடாகம், குச்சிப்பாளையம், வேலியம்பாக்கம், அத்தியூர்திருக்கை, நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி தான் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வார்கள்.

அந்த வகையில், நடப்பு ஆண்டிலும் கரும்பு சாகுபடியில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது கரும்பு அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கி விட்டனர்.

ரேஷன் கடைகளுக்கு அனுப்பிவைப்பு

கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் ரே‌‌ஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு 2 அடி கரும்புத்துண்டு வழங்கி வந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தின் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் நாளை (திங்கட்கிழமை) முதல் மாவட்டத்தில் உள்ள 1,254 ரே‌‌ஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 97 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதையொட்டி கரும்பு தோட்டத்திற்கு அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று மொத்தமாக கரும்புகளை கொள்முதல் செய்து ரே‌‌ஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கரும்புகளை அறுவடை செய்து அதனை மினி லாரி, லாரி, டிராக்டர்களில் ஏற்றி ரே‌‌ஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் ஒரு சில உள்ளூர் வியாபாரிகள், நேரடியாக கரும்பு தோட்டத்திற்கு வந்து விவசாயிகளிடம் விலைபேசி கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்கின்றனர்.

கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பரவலாக மழை பெய்துள்ளது. நிவர், புரெவி புயல்கள், நல்ல மழையை கொடுத்து விட்டு சென்றுள்ளது. இருப்பினும் தாமதமின்றி மழை பெய்ததாலும், முன்கூட்டியே ஜூன், ஜூலை மாதங்களில் மழை பெய்யாததால் ஓரளவு கரும்பு விளைச்சல் ஆகியுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் மழைப்பொழிவு இருந்திருந்தால் விளைச்சல் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கரும்புகளும் 7½ அடி முதல் 8 அடி வரை இருந்திருக்கும், ஆனால் தற்போது 6 அடி முதல் 6½ அடி வரைதான் கரும்பு விளைச்சல் ஆகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கி வருவதால் அரசே எங்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்வதால் ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. ஆனால் இந்த முறை கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் ஆட்கள் கூலி, வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு, உர செலவு ஆகிய அனைத்துமே கூடியுள்ளதால் விலையை அதிகரித்து விற்பனை செய்ய முடிவெடுத்து அரசிடம் ஒரு கரும்புக்கு ரூ.20-ம், 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டுக்கு ரூ.360 வரையும் கேட்டோம். ஆனால் கடந்த ஆண்டு ஒரு கரும்புக்கு அரசு சார்பில் ரூ.16 வழங்கி வந்த நிலையில் தற்போது 1 ரூபாயை அதிகரித்து கரும்பு ஒன்றுக்கு ரூ.17-ம், 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டுக்கு ரூ.340 என்று விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்து செல்கின்றனர். இனிவரும் காலங்களில் கரும்புக்கு விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்.

சென்னை உள்ளிட்ட பகுதிகள்

நாங்கள் ஆண்டுதோறும் அறுவடை செய்யும் கரும்புகளை சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டங்களுக்கும், ஆந்திரா மாநிலத்திற்கும் அனுப்புவோம். ஆனால் இந்த ஆண்டு அரசு சார்பில் ஒரு முழு கரும்பு வழங்குவதால் அவர்களே எங்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளிமாவட்டத்திற்கும், வெளிமாநிலத்திற்கும் அனுப்பவில்லை. அரசு கொள்முதல் செய்யும் கரும்புகளை தவிர மீதமுள்ள கரும்புகளை உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்கவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Next Story