நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்; கோவையில் நடந்த மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


தேவராயபுரத்தில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய போது எடுத்தபடம்
x
தேவராயபுரத்தில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய போது எடுத்தபடம்
தினத்தந்தி 3 Jan 2021 10:41 AM IST (Updated: 3 Jan 2021 10:41 AM IST)
t-max-icont-min-icon

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கோவை அருகே நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மக்கள் கிராம சபை கூட்டம்
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் ஊராட்சி பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி கோவில் முன்பு தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. வை நிராகரிக்கிறோம் என்கிற பெயரில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்றுக்காலை நடந்தது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி வருகிற 10-ந் தேதி வரை மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. மற்ற மாவட்டங்களில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தை விட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நீங்கள் மிகவும் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த எழுச்சியை பார்க்கும்போது, ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பது தெரிகிறது. இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் இருக்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி
மக்களின் அடிப்படை பிரச்சினைகளை அரசுக்கு எடுத்து கூறவே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் அந்த கூட்டங்களை அரசு நடத்துவதில்லை. தமிழக அரசின் ஊழல்கள் பற்றி கிராம சபை கூட்டங்களில் நாங்கள் சொல்லி வருகிறோம். தி.மு.க.வினரின் போராட்டங்களை நடத்தவிடாமல் ஆளும் கட்சி சார்பில் தடைபோட்டு அதற்கு அனுமதி தர மறுத்து வருகின்றனர். எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்கும் பக்குவம் எங்களுக்கு உள்ளது.

தமிழகத்தில் இந்த அரசு கிராம சபை கூட்டங்களை நடத்தாததால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 40 இடங்களில் 39 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அதைப்போல கடந்த உள்ளாட்சி தேர்தலின்போதும் கிராம சபை கூட்டங்களை நடத்தினோம். அதில் 78 சதவீத இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை தேடி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நான் ரெடி
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எல்.இ.டி. தெருவிளக்குகளை மாற்றும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது காண்டிராக்ட் விடுவதில் ஊழல் நடந்ததாக கூறி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை சென்னை ஐகோர்ட்டு விசாரித்து இதில் உண்மை இருக்கிறது என்று கூறி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. நியாயப்படி எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்? சி.பி.ஐ. விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்தால் நான் அவரை பாராட்டியிருப்பேன். ஆனால் எடப்பாடி என்ன செய்தார்? டெல்லிக்கு சென்று சுப்ரீம் கோர்ட்டில் தடை கேட்டு வாங்கினார்.

அதனால் தான் முதல்-அமைச்சர் உள்பட பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை கவர்னரிடம் ஆதாரத்தோடு, புள்ளி விவரங்களோடு அளித்தோம். இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்னை பார்த்து சவால் விட்டுள்ளார். என்ன சவால் தெரியுமா? மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார். தன் மீதான ஊழல் புகாரை நிரூபிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று என்னை பார்த்து கேட்கிறார்.

அமைச்சர் வேலுமணியின் சவாலை ஏற்க நான் ரெடி? நீங்கள் ரெடியா? நான் நிரூபிக்கிறேன். இன்னும் 4 மாதங்கள் பொறுங்கள். நாங்கள் கவர்னரிடம் கொடுத்த ஊழல் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம்.

தொண்டர்களுக்கு அறிவுரை
எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வைத்துக்கொண்டிருக்கிறார். நான் வகித்த பதவி தான். நான் துணை முதல்-அமைச்சராக இருந்தாலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பையும் என் கையில் வைத்திருந்தேன். ‘உள்ளாட்சியில் நல்லாட்சி செய்தவன்’ என்று பெயர் எடுத்தவன், இந்த அடியேன் ஸ்டாலின். ஆனால் இப்போது உள்ளாட்சித்துறை என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். அந்தளவுக்கு அந்த துறையை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்; கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.

உள்ளாட்சித்துறை ஊழல்களை-அக்கிரமங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லும் விதமாகத்தான், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, ஒவ்வொரு ஊராட்சியிலும் சென்று, அதற்கான பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு எப்படியாவது தடை ஏற்படுத்த வேண்டும் என இங்குள்ள அமைச்சர் செயல்படுகிறார்.

இன்றைக்கு நாம் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். இதற்கு போட்டியாக நாளைக்கு ஆளும்கட்சி சார்பில் ஒரு கூட்டம் நடக்கப்போகிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவிருக்கிறார். வழியெங்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள என்னை வரவேற்க பலூன்கள் கட்டப்பட்டுள்ளன. பலூன்களை பார்த்ததும் அவரது ஞாபகம் வந்துவிட்டது. அவற்றை விரைவில் அப்புறப்படுத்திவிடுமாறு நம்முடைய தொண்டர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.

போட்டி கூட்டம்
போட்டி கூட்டம் நடத்துங்கள். ஆனால், நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்வதை விட; மக்களாகிய நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் கூறக்கூடிய தெளிவு - துணிவு - தெம்பு - ஆற்றல் - அருகதை அவர்களுக்கு இருக்கிறதா?

முதல்-அமைச்சர் வேட்பாளர்
எடப்பாடி பழனிசாமியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்த உடனேயே அவர் தான் முதல்-அமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொண்டிருக்கிறார். கூட்டணி கட்சியான பா.ஜனதாவே இன்னும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தி.மு.க.வில் யார் முதல்-அமைச்சர் என்று கம்பீரமாக சொல்ல முடியும். அதைப்போல அ.தி.மு.க. வில் சொல்ல முடியுமா?

ஜெயலலிதாவின் மரணம்
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தான். அதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் 3 ஆண்டுகளாக நடக்கிறது. இதன்மூலம் ஜெயலலிதாவின் மரணத்தையே மறைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப்போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். இப்போது சொல்கிறேன், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து விசாரித்து அதில் தொடர்பு உள்ளவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்ற உறுதியும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரை பேசுமாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.அதன்படி அவர்கள் எழுந்து பேசினார்கள். அவர்கள் கூறியதை கேட்ட மு.க.ஸ்டாலின் அந்த கோரிக்கைள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார்.

மக்கள் கிராம சபை கூட்டத்துக்காக மரத்தின் கீழ் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் உட்கார்ந்திருந்தார்.

கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில பையா கவுண்டர், நா.கார்த்திக் எம்.எல்.ஏ, பொங்கலூர் பழனிசாமி, டி.ஆர்.சண்முக சுந்தரம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் டி.ஏ.ரவி, வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் என்.எம்.சண்முக பிரகாசம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செ.கணேசன், நரசீபுரம் கார்த்திகேயன், வேடப்பட்டி பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சின்னியம்பாளையத்தில் வரவேற்பு
முன்னதாக சின்னியம்பாளையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு சூலூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சன் ராஜேந்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் இருகூர் சந்திரன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜெகநாதன், கபிலன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சி.என். ராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏவி அன்பரசு, முத்துலிங்கம், கொடி நடராஜ், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து சூலூர் பிரிவில் சூலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் த.மன்னவன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சூலூர் நகர பொறுப்பாளர் சோலை பா. கணேஷ், பட்டணம் ஊராட்சிமன்ற தலைவர் எஸ். கோமதி செல்வகுமார், பன்னீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கணியூர் சுங்கக் சாவடி முன்பு சூலூர், சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நித்திய ஜி.மனோகரன், முத்துமாணிக்கம், ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் நகர செயலாளர் எஸ்.தங்கவேல், நடுமில் மணி, சம்மங்காடு சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story