நீலகிரி மாவட்டத்தில், 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை; 75 பேர் பங்கேற்பு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை 3 இடங்களில் நடந்தது. இதில் 75 பேர் பங்கேற்றனர்.
பயிற்சி
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களபணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் அறிவுரைப்படி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஒத்திகை நடந்தது. தடுப்பூசி போடும்போது ஏற்படும் சவால்களை அடையாளம் கண்டு, அதனை நிவர்த்தி செய்வதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.
ஒத்திகைக்காக நீலகிரி மாவட்டத்தில் 823 தடுப்பூசி வழங்கும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தடுப்பூசி செலுத்துவதற்காக 1,232 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது.
ஒத்திகை
ஊட்டியில் உள்ள சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனை, குன்னூர் அரசு லாலி மருத்துவமனை, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. ஊட்டியில் நடந்த ஒத்திகையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்கள பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளுடன் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.
முன்னதாக காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டு தடுப்பூசி செலுத்துவது, அதன்பின்னர் அரை மணி நேரம் அவர்களை கண்காணிப்பு அறையில் வைப்பது குறித்து ஒத்திகை நடந்தது.
முதற்கட்ட தடுப்பூசி
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 43 அரசு மருத்துவமனைகள், 292 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், களபணியாளர்கள் என 5,732 பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
இதையொட்டி 3 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
அனைத்து மையங்களிலும் 25 நபர்கள் வீதம் 75 பேர் ஒத்திகையில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தடுப்பூசி மையமும் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக செயல்பட்டது. அங்கு மாவட்ட தடுப்பூசி அலுவலர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டார். மேலும் பாதுகாவலர், சரிபார்ப்பவர், தடுப்பூசி வழங்குபவர், கண்காணிப்பாளர்கள் உள்பட 5 நபர் குழு இடம்பெற்றது.
குறுஞ்செய்தி
ஒத்திகையில் கலந்துகொண்டவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
கண்காணிப்பாளர் அறையில் கட்டாயம் 30 நிமிடம் காத்திருக்க வைக்கப்பட்டனர்.
ஒத்திகை குறித்த தகவல்களை மாநில சுகாதாரத்துறையிடம் சமர்ப்பித்தவுடன், அதன் அறிக்கை அவர்கள் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story