கோத்தகிரி பகுதியில் கொய்மலர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்


கோத்தகிரியில் உள்ள ஒரு குடிலில் கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டு உள்ள காட்சி.
x
கோத்தகிரியில் உள்ள ஒரு குடிலில் கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டு உள்ள காட்சி.
தினத்தந்தி 3 Jan 2021 12:02 PM IST (Updated: 3 Jan 2021 12:02 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் கொய்மலர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கொய்மலர் சாகுபடி
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. ஆனால் பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு வந்ததால், மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகளை தமிழக அரசு ஊக்குவித்தது. குறிப்பாக கொய்மலர் சாகுபடிக்கு 50 சதவீத மானியத்தை வழங்கியது. இதனால் ஏராளமான விவசாயிகள் கொய்மலர் சாகுபடி செய்தனர். ஊட்டி மற்றும் கோத்தகிரி பகுதிகளில் கொய்மலர் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவியதால், முக்கிய விழாக்கள் எதுவும் ஆடம்பரமாக நடைபெறவில்லை. இதனால் கொய்மலர் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டது.

நஷ்டம்
இதன் காரணமாக வங்கியில் இருந்து கடன் பெற்று விவசாயம் மேற்கொண்டு வந்த விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். மேலும் பெரும்பாலான விவசாயிகள் கொய்மலர் சாகுபடி செய்ய அமைக்கப்பட்ட குடில்களில் பீன்ஸ், கேரட் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறி பயிர்களை பயிரிட தொடங்கினர். ஆனால் அதிலும் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. மேலும் ஆடம்பர விழாக்களும் நடைபெற தொடங்கிவிட்டன. இதனால் கொய்மலருக்கு சந்தையில் வரவேற்பு அதிகரித்து உள்ளது. மேலும் விலையும் உயர்ந்து வருகிறது.

சந்தையில் கிராக்கி
இதைத்தொடர்ந்து மீண்டும் கொய்மலர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்களது குடில்களில் உரங்கள் மற்றும் தேங்காய் நார் கலவையுடன் கூடிய மண்ணை கொட்டி பதப்படுத்துகின்றனர். மேலும் லில்லியம், கார்னேஷன், ஜர்பரா உள்ளிட்ட மலர்களின் விதை மற்றும் நாற்றுக்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விதைக்கின்றனர். தொடர்ந்து பராமரிப்பு பணியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கொய்மலர் சாகுபடி செய்து வரும் விவசாயி மேகநாதன் என்பவர் கூறியதாவது:-

நீலகிரியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். கொரோனா பரவலால் கடந்த 9 மாதத்தில் மட்டும் விவசாயிகளுக்கு சுமார் ரூ.400 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஏராளமான விவசாயிகள் கொய்மலர் சாகுபடியில் இருந்து காய்கறி விவசாயத்துக்கு மாறிவிட்டதால், சந்தையில் கொய்மலருக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் விலை அதிகரித்து உள்ளது. எனவே மீண்டும் கொய்மலர் சாகுபடியை தீவிரமாக தொடங்கி உள்ளோம். சராசரியாக கொய்மலர் விதையை தலா ரூ.15 முதல் ரூ.25 வரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஒரு கொத்து லில்லியம் மலர்கள் தற்போது ரூ.50 முதல் ரூ.65 வரை சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story