ஆம்பூரில் மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு வெற்றிவேல் யாத்திரை மூலம் தி.மு.க.வின் தூக்கம் தொலைந்து விட்டது - பா.ஜ.க.மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு
வெற்றிவேல் யாத்திரை மூலம் தி.மு.க.வின். தூக்கம் தொலைந்து விட்டது என ஆம்பூர் அருகே நடந்த பாரதீய ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் மாநாட்டில் மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் பாரதீய ஜனதா கட்சி அணி, பிரிவு, மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.
இதில் மாநில தலைவர் எல் முருகன் கலந்து ெகாண்டு பேசியதாவது:-
தமிழக அரசியலில் மிகப்பெரிய அளவில் தவிர்க்க முடியாத, மாற்று சக்தியாக பாரதீய ஜனதா கட்சி வலிமை பெற்றுள்ளது. எங்கள் கட்சியில் பலதரப்பட்ட மக்களும் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர். அடித்தட்டு, ஏழை மக்களுக்கு உதவி செய்தார். அதேபோல் மோடியும் தவிர்க்க முடியாத தலைவராக உள்ளார். ஏழைகளின் தலைவராக மோடி திகழ்கிறார்.
விவசாயிகளே அவர்களுடைய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்பதற்காகத் தான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு தேர்தலின்போது விவசாயிகளே தங்களுடைய விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய சட்டம் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். விவசாயிகள் மேம்பாடு அடைய வேண்டுமென பிரதமர் மோடி வேளாண் சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
ஆனால் அதே ஸ்டாலின் தற்போது வேளாண் சட்டத்தை எதிர்க்கிறார். அவர் பொய் பிரசாரம் செய்கிறார். பொதுமக்கள், விவசாயிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்தவர்கள் தமிழக மக்கள் தான். புதிய வேளாண் சட்டங்களால் இடைத்தரகர்கள், கமிஷன் வாங்குபவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் தான் அதற்கு தி.மு.க.எதிர்ப்பு தெரிவிக்கின்றது. ஏனெனில் தி.மு.க.வும், ஊழலும் பிரிக்க முடியாதது. நில அபகரிப்பு புகார்கள் தி.மு.க.வினர் மீது அதிகம் வந்ததால் தான் நிலஅபகரிப்பு புகாரை விசாரிக்கவே தனியாக பிரிவு தொடங்கப்பட்டது.
தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தி.மு.க.வால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண் அவர்களுடைய கட்சியினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளார்.
தி.மு.க.வை தமிழகத்திலிருந்து அடித்து விரட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. வருகின்ற மே மாதம் தி.மு.க.வை தமிழகத்திலிருந்து விரட்டி அடிப்போம்.
வெற்றிவேல் யாத்திரை மூலம் தி.மு.க.வை புலம்பச் செய்துள்ளோம். வெற்றிவேல் யாத்திரை மூலம் தி.மு.க.வின் தூக்கம் தொலைந்து விட்டது.
தி.மு.க.வால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு தமிழகத்தில் எடுபடாது. தமிழக சட்டப் பேரவைக்கு பாரதீய ஜனதா கட்சியினர் எம்.எல்.ஏ.க்களாக செல்ல அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர் நரேந்திரன், மாநில செயலாளர் பி.கார்த்தியாயினி, வேலூர் மாவட்ட பார்வையாளர் கொ.வெங்கடேசன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் தொழில் பிரிவு குருசேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story