தர்மபுரி மாவட்டத்தில், 45 அம்மா மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை - கலெக்டர் கார்த்திகா தகவல்


தர்மபுரி மாவட்டத்தில், 45 அம்மா மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை - கலெக்டர் கார்த்திகா தகவல்
x
தினத்தந்தி 3 Jan 2021 1:49 PM GMT (Updated: 3 Jan 2021 1:49 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 45 அம்மா மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 43 அம்மா மினி கிளினிக்குகள், நகர பகுதிகளில் 2 மினி கிளினிக்குகள் என மொத்தம் 45 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது. தற்போது வரை மாவட்டத்தில் பொம்மஅள்ளி, உச்சம்பட்டி, துறிஞ்சிப்பட்டி, ஜம்மனஅள்ளி, கே.ஈச்சம்பாடி, ஜருகு, கிருஷ்ணாபுரம், ஜிட்டாண்டஅள்ளி, அ.மல்லாபுரம் ஆகிய இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது.

இவற்றின் மூலமாக ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கேயே அவர்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அம்மா மினி கிளினிக்குகள் கிராமப்புற பகுதிகளில் காலையில் 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். நகர பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 8 மணி வரையிலும் செயல்படும்.

அம்மா மினி கிளினிக்கில் புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை, தாய்-சேய் நலப்பணிகள், தடுப்பூசி வழங்குதல், தொற்றா நோய்கள், அவசர சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, புற்றுநோய் கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story