சேலம் கிச்சிப்பாளையத்தில் பணம் கொடுக்காததால் நெல்லை வியாபாரியை கடத்தி வீட்டில் அடைத்து துன்புறுத்திய ரவுடிகள் - தப்பி வந்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
சேலம் கிச்சிபாளையத்தில் பணம் கொடுக்காததால் நெல்லை வியாபாரியை ரவுடிகள் கடத்தி சென்று வீட்டில் அடைத்து துன்புறுத்தினர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த அவர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம்,
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. பிரபல ரவுடியான இவர் கடந்த மாதம் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த கொலை தொடர்பாக கரூர், நாமக்கல், ஓமலூர் ஆகிய கோர்ட்டுகளில் 19 பேர் சரண் அடைந்தனர். மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கோர்ட்டுகளில் சரண் அடைந்தவர்களில் 7 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
மற்றவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில், ரவுடி செல்லதுரை கொலையை முன்கூட்டியே போலீசார் தடுத்திருக்கலாம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உளவுத்துறை போலீசார் கூறியதாவது;-
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலர் மளிகைக்கடை, டீக்கடை உள்ளிட்ட கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்களை மிரட்டி ரவுடிகளான சிலம்பரசன், ஜான் கோஷ்டியினர் பணம் வசூலித்து வந்தனர். பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களை மிரட்டுவதுடன் பொருட்களை சேதப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் செல்லதுரையை கொலை செய்வதற்கு முன்பு ரவுடிகள் நெல்லையை சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
அவர் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த ரவுடிகள் அந்த வியாபாரியை கடத்தி சென்றனர். பின்னர் சேலத்தில் உள்ள சிலம்பரசன் வீட்டில் அவரை 3 நாட்கள் அடைத்து வைத்து பணம் கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி வந்த அந்த வியாபாரி நடந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பி விட்டனர். இதையடுத்து அந்த வியாபாரி கிச்சிப்பாளையத்தில் தங்கியிருந்த வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனருக்கு தகவல் கிடைத்ததும் இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பிறகு நெல்லையில் இருந்த அந்த வியாபாரியிடம் போலீசார் போனில் விசாரித்தனர். வியாபாரி புகார் கொடுத்தவுடன் போலீசார் விசாரணை நடத்தி சிலம்பரசன், ஜான் ஆகியோரது கோஷ்டியினரை கைது செய்திருந்தால் செல்லதுரை கொலை சம்பவம் நடந்து இருக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் செல்லதுரையை கொலை செய்வதற்காக வேலூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர்ராஜா சேலத்தில் ஒரு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்ததும், இதற்காக ரூ.70 லட்சம் வரை கைமாறியதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வசூர்ராஜாவை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story