தமிழக மக்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு கிடைக்க காரணமானவர் மு.க.ஸ்டாலின் - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேச்சு


தமிழக மக்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு கிடைக்க காரணமானவர் மு.க.ஸ்டாலின் - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 3 Jan 2021 10:36 PM IST (Updated: 3 Jan 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்க காரணமாக இருந்தவர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தான் என விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் முத்துராமன் பட்டியில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:- அ.தி.மு.க. அரசு நகராட்சி தேர்தல் நடத்தியிருந்தால் நகராட்சி தலைவர், கவுன்சிலர் ஆகியோரிடம் உங்களது குறைகளை எடுத்துக்கூறி பரிகாரம் தேடி இருக்கலாம்.

ஆனால் நகராட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க. வெற்றி பெறும் என்பதற்காக அ.தி.மு.க. அரசு நகராட்சி தேர்தலை நடத்தவில்லை. இந்தநிலையில் உங்களது குறைகளை தீர்க்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் பெண்களுக்கு இலவச ஸ்டவ் அடுப்பு வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் பெண்களுக்கு இரண்டு அடுப்பு கொண்ட ஸ்டவ் வழங்கப்பட்டது.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு ரூ. 2,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வற்புறுத்தினார். ஆனால் தமிழக அரசு ரூ.1,000 மட்டுமே வழங்கியது.

தற்போது பொங்கல் பரிசாக உங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் மு.க. ஸ்டாலின் வற்புறுத்தினார். அதன்விளைவாக தற்போது அரசு பொங்கல் பரிசாக ரூ.2,500 அறிவித்துள்ளது. இவ்வாறு பொங்கல் பரிசாக ரூ.2,500 கிடைக்க மு.க.ஸ்டாலின் தான் காரணமாக இருந்தார். மக்கள நலனில் அக்கறை கொண்ட தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் மக்கள் நலத்திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்.

மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனால் தான் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எனவே வருகின்ற தேர்தலில் நீங்கள் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வடக்கு மாவட்டஇளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணகுமார், மாணவரணி செயலாளர் ராஜகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story