வெளிநாடு அனுப்புவதாக வியாபாரியிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி
ராமநாதபுரம் அருகே வியாபாரியிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்த காரைக்காலை சேர்ந்த நபர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள பொட்டகவயல் ரகுமத்நகரை சேர்ந்தவர் அக்பர்அலி மகன் முகம்மது யாசர் அராபத்(வயது30). பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் காரைக்கால் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்குமார் என்பவர் அறிமுகமாகி வெளிநாட்டிற்கு நல்ல சம்பளத்தில் வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்து வருவதாகவும், தான் அனுப்பிய நபர்கள் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பழ வியாபாரத்தில் போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்த முகம்மது யாசர் அராபத் அவரின் பேச்சை நம்பி தன்னையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார்.
இதற்காக அருண்குமார் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலவாகும் என்று கூறியதால் அவர் கூறியபடி முகம்மது யாசர் அராபத் அந்த தொகையை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். மேலும்: தனது நண்பர்களிடமும் அருண்குமாரை அறிமுகம் செய்து வைத்து வெளிநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார்.
பணத்தினை பெற்றுக்கொண்ட அருண்குமார் வெளிநாட்டிற்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் கொடுத்த பணத்தை கேட்டபோது தரமறுத்து வந்துள்ளார். தனது நண்பர்களிடமும் இதேபோன்று பணம் வாங்கி கொண்டு வெளிநாடு அனுப்பாமல் ஏமாற்றி வருவதை அறிந்தார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகம்மது யாசர் அராபத் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து காரைக்காலை சேர்ந்த அருண்குமாரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story