புத்தாண்டு கொண்டாட்டத்தில் தகராறு: ஊராட்சி கவுன்சிலரை காரில் கடத்திச்சென்று நகை பறிப்பு - 11 பேரை போலீஸ் தேடுகிறது
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சண்டையை விலக்கிய கவுன்சிலரை தாக்கி காரில் கடத்தி சென்று நகைகளை பறித்ததாக 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலை சேர்ந்தவர் சதீஸ் (வயது 29).இவர் காஞ்சிரங்கால் பகுதியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருக்கிறார்.அத்துடன் சிவகங்கையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 31-ந்தேதி நள்ளிரவில் காஞ்சிரங்காலை சேர்ந்த சிலர் அந்த பகுதியில் புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். அப்போது அந்த வழியில் வந்த இலந்தங்குடிபட்டியை சேர்ந்த பாலா என்பவருக்கும் புத்தாண்டு கொண்டாடியவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த சதீஷ் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக ெதரிகிறது.
இந்நிலையில் மறுநாள் பாலா தன்னிடம் இரவில் தகராறு செய்த நபர்கள் யார்? என்று சதீஷிடம் விசாரித்துள்ளார். ஆனால் சதீஷ் அவர்களைப் பற்றி சொல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் சதீஷ் ஓட்டலுக்கு டிபன் வாங்க வந்துள்ளார். அப்போது பாலா உள்ளிட்ட சிலர் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து உள்ளனர். அவர்கள் சதீசை காரில் கடத்திச்சென்று அவரை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடமிருந்து 3 பவுன் நகை, ஒரு பவுன் மோதிரம், மற்றும் அவரிடம் இருந்த பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சதீஷை பெருமாள்பட்டி அருகே பைபாஸ் ரோட்டில் கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்று விட்டதாக தெரிகிறது.
காயம் அடைந்த சதீஷ் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் விசாரணை நடத்தி பாலா, கவுதம், பிரபாகரன் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story