மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்பட எப்போதும் துணை நிற்போம்: பெண்கள் முன்னேற ஜெயலலிதா கொண்ட அக்கறையை நாங்களும் கொண்டுள்ளோம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு


மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்பட எப்போதும் துணை நிற்போம்: பெண்கள் முன்னேற ஜெயலலிதா கொண்ட அக்கறையை நாங்களும் கொண்டுள்ளோம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 3 Jan 2021 11:12 PM IST (Updated: 3 Jan 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

“பெண்கள் முன்னேற ஜெயலலிதா கொண்டிருந்த அக்கறையை நாங்களும் கொண்டுள்ளோம்” என ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினருடன், கலந்துரையாடல் கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், சதன்பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். வழியில் ஜெயலலிதாவும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மீது அக்கறை கொண்டிருந்தார். அவர் வழியில் மகளிர் முன்னேற்றத்துக்காக அதே அக்கறையை நாங்களும் கொண்டு்ள்ளோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு முன்னுரிமை அளித்து வங்கிகள் மூலம் தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 11 லட்சத்து 35 ஆயிரத்து 600 சுயஉதவிக் குழுவினருக்கு வங்கி இணைப்பு கடனாக ரூ.42 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. எந்த துறைக்கும் இவ்வளவு நிதி வழங்கப்படவில்லை. அதேபோல கடந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளோம். இவ்வாறு பெண்களுக்கு பெருமை சேர்ப்பது அ.தி.மு.க. அரசு.

அடுத்த ஆண்டு புதிதாக ஆயிரத்து 600 மருத்துவ படிப்பு இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. அதில் 130 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். இதுபோக 150 பல் மருத்துவ இடங்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். இதில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்துகிறது.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினிகிளினிக் தொடங்கப்படுகிறது. அதில் ராமநாதபுரத்தில் 39 மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இது உங்கள் அரசு. மக்கள் அரசு. ஏழை மக்களுக்கு உதவும் அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் முதல்-அமைச்சர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, “தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க.வை அகற்றுவோம் என பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர். கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கு அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடத்துவது சட்டப்படி தவறானது. சட்டத்தை மீறி செயல்படும் தி.மு.க.வினர் மீது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் தி.மு.க.வின் இதுபோன்ற கூட்டங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தடைசெய்துள்ளது. அதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

பின்னர் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்டசெயலாளர் பால்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளர் ராஜ்சத்யன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் போர் நடக்க போகிறது. இந்தபோரில் வென்று வெற்றிக்கொடி நாட்டவேண்டும். இளைஞர்கள் தற்போது நவீன விஞ்ஞான உலகில் வாழ்கிறீர்கள். அதற்கேற்ப தகவல் தொழில்நுட்ப பிரிவு திறம்பட பணியாற்றி, நமக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை தவிடுபொடியாக்கி புறமுதுகிட்டு ஓட வைக்க வேண்டும். இளைஞர்கள், இளம்பெண்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ள கட்சி அ.தி.மு.க.தான். உழைப்பவர்கள், விசுவாசமுள்ளவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு வரமுடியும். தி.மு.க. குடும்ப கட்சி. வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வரமுடியும். அங்கு உழைப்பு கிடையாது.

அ.தி.மு.க.விற்கு பின்னால் லட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம் அணிவகுத்து நின்று தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தகவல்தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் 200 பேர் கண்தானம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பணியை பாராட்டுகிறேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர இந்த அரசு பாடுபடும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்ப்பு ஆகிய பணிகளை இளைஞர் பாசறையினர் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து அவர், ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை பகுதியில் உள்ள முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

மீனவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குந்துகால் மீன்பிடி இறங்கு தளம் ரூ.70 கோடியில் நாங்கள் தான் கட்டி கொடுத்தோம். மண்டபத்தில் 2 பேருக்கும், ராமேசுவரத்தில் 26 பேருக்கும், ஆழ்கடல் மீன் பிடி படகுகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எப்போதெல்லாம் கைது செய்யப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் பிரதமரிடமும், அமைச்சர்களுடனும் நானே நேரடியாக பேசி படகுடன் மீனவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். சீனியப்பா தர்கா என்ற இடத்தில் துண்டில் வளைவு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் சுற்றுலா பகுதியாக இருந்தாலும் அந்த பகுதியில் வணிக வசதிகளை அதிகப்படுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் செய்து வருகிறோம்.

மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்பட எப்போதும் துணை நிற்போம். மீனவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story