ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்தி தண்டனை வழங்குவது தான் முதல் வேலை மு.க.ஸ்டாலின் பேச்சு


ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்தி தண்டனை வழங்குவது தான் முதல் வேலை மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 4 Jan 2021 4:33 AM IST (Updated: 4 Jan 2021 4:33 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்தி தண்டனை வழங்குவது தான் எனது முதல் வேலை என்று மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் நேற்று மாலை தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டம் நடைபெற்ற அரங்கு தகரபந்தலால் அமைக்கப்பட்டு இருந்தது.

அரங்கம் முழுவதும் ஏராளமான பெண்கள் அமர்ந்து இருந்தனர். மு.க.ஸ்டாலின் அரங்கிற்குள் வந்ததும் முதலில் அவர்களை பார்த்து கும்பிட்டபடியே நான்குபுறமும் நடந்து சென்றார். அப்போது சில இளம்பெண்கள் அவருடன் செல்போனில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். அதன்பின்னர் மேடைக்கு வந்து மு.க.ஸ்டாலின் அமர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரே கல்லில் பல மாங்காய்

இதுவரை நான்கைந்து இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி இருக்கிறேன். அவை எல்லாவற்றையும் விட சிறப்பாக இந்த கூட்டம் அமைந்து உள்ளது. இங்கு தாய்மார்கள், அக்கா, தங்கைமார்கள் என பெண்கள் ஏராளமானவர்கள் கூடி இருப்பதை பார்க்கும்போது இங்கேயே இருந்து விடலாமா? என நினைக்க தோன்றுகிறது. இது தி.மு.க. மகளிர் அணி மாநாடு போல் உள்ளது. செந்தில்பாலாஜி, தான் எடுத்த எந்த பணியையும் சிறப்பாக செய்யக்கூடியவர். அவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல பல மாங்காய்களை அடித்து இருக்கிறார். அதற்காக அவரையும், அவருக்கு துணையாக இருந்த மாவட்ட நிர்வாகிகளையும் பாராட்டுகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா முதல்- அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக தான் மக்கள் வாக்களித்தனர். அந்த தேர்தலில் நமக்கும் அவர்களுக்கும் 1.1 சதவீதம் வாக்குகள் தான் வித்தியாசம். ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறந்ததும் கருணாநிதி கூறியபடி நான் வருத்தத்துடன் போய் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே வழக்குகளில் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக 2 முறை முதல்- அமைச்சர் பதவி வகித்த அதே ஓ.பன்னீர்செல்வம் தான் மீண்டும் முதல்- அமைச்சராக்கப்பட்டார்.

ஆனால் இரண்டு மூன்று மாதங்களில் அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டு சசிகலா முதல்- அமைச்சராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அப்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க முடியவில்லை. கூவத்தூரில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் சசிகலா காலில் சா‌‌ஷ்டாங்கமாக விழுந்த எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தியானம்

அப்போது கட்சியை உடைக்க முடிவு செய்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு போய் சம்மணம் போட்டு உட்கார்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார் (தியானம் செய்வது போல் உட்கார்ந்து காட்டினார்). ஜெயலலிதா ஆவியோடு பேசியதாக கூறினார். ஜெயலலிதா இறந்ததே மர்மமாக உள்ளது என பேட்டி கொடுத்தார். உடனே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு தூது விட்டு ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும். உங்களுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி தருகிறோம் என்று கூறினார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் இதுவரை முடிவு வரவில்லை. ஜெயலலிதா சாதாரண ஆள் அல்ல. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்தவர். அவருக்கே இந்த நிலைமையா? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம் 8 முறை சம்மன் அனுப்பியும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகவில்லை.

மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள்

இன்னும் 4 மாதங்களில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்குவது தான் எனது முதல் வேலை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதனை நான் அரசியலுக்காக சொல்லவில்லை. இந்த பிரச்சினையில் அரசியல் செய்யவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மக்கள் வைத்த கோரிக்கைகள்

இதனை தொடர்ந்து மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டம், விவசாயிகள் பிரச்சினை, லாரி தொழிலில் உள்ள தகுதி சான்றிதழ் (எப்.சி.) பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் பற்றி கோரிக்கை வைத்து பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் மீண்டும் பேசியதாவது:-

விவசாயி தற்கொலை

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல மாநில முதல்-மந்திரிகள் செயல்பட்டு வருகிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் மோடிக்கு ஆதரவாக உள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிராக கொடுமையான நிலை உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பிள்ளையார் நத்தம் என்ற ஊரைச்சேர்ந்த நாராயணசாமி என்ற விவசாயி தான் பயிரிட்ட மக்காச்சோளம் பூச்சி தாக்குதலில் அழிந்து விட்டதால் வேதனை அடைந்து தான் பயிர் செய்த நிலத்தில் உள்ள மண்ணில் 2 வயதான தனது பேத்தி மித்ராவுக்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை இன்று(நேற்று) மதியம் தொலைக்காட்சியில் செய்தியாக பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன். தன்னை ஒரு விவசாயி என மூச்சுக்கு 300 முறை கூறிக்கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனைப்பற்றி கவலை கொள்ளவில்லை.

இரண்டாவது ஊழல் பட்டியல்

எப்.சி. பிரச்சினை பற்றி இங்கே கூறினார்கள். இதற்கு காரணம் அந்த துறைக்கு அமைச்சராக உள்ள இந்த ஊரை சேர்ந்த விஜயபாஸ்கர் தான். ஏற்கனவே குட்கா புகழ் விஜயபாஸ்கர் என ஒரு அமைச்சர் உள்ளார். எனவே இவர் எப்.சி. விஜயபாஸ்கராகிவிட்டார். இவரது துறையில் மட்டும் சுமார் 2,300 கோடி ரூபாய் ஊழல் நடந்து உள்ளது. தமிழக அமைச்சர்கள் மீது தி.மு.க. சார்பில் ஏற்கனவே ஊழல் பட்டியல் ஆளுனரிடம் கொடுத்து இருக்கிறேன். அந்த பட்டியலை கொடுத்து விட்டு வெளியே வந்தபோது இது பார்ட் 1 தான். பார்ட் 2 பட்டியல் விரைவில் கொடுக்கப்படும் என அப்போதே கூறினேன்.

பார்ட் 2 பட்டியலில் விஜயபாஸ்கர் உள்ளார். அந்த பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பட்டியலும் விரைவில் ஆளுனரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வளவு நாள் பொறுத்து விட்டீர்கள். இன்னும் 4 மாதங்கள் தான். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் எல்லாம் தூசி தட்டி எடுத்து விசாரணை நடத்தப்படும். அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். என்னை நம்புங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஸ்டாலின் வாசித்தார். அதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிப்போம் என எழுதிவிட்டு சென்றார்.

Next Story