தஞ்சையில் தொடர்மழை; அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன விவசாயிகள் கவலை


தஞ்சையில் தொடர்மழை; அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 4 Jan 2021 12:43 AM GMT (Updated: 4 Jan 2021 12:43 AM GMT)

தஞ்சையில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து காணப்பட்டன. பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. நிவர், புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பரவலாக மழை பெய்தது. அதன்பின்னர் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதில் புரெவி புயல் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. காலை 8 மணிக்குப்பின்னர் மழை இல்லை. ஆனால் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

தண்ணீர் தேங்கியது

இந்த நிலையில் மதியம் 3 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. தஞ்சை மேலவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, சீனிவாசபுரம் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம் ஆகிய வட்டாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கரில் வயல்களில் மழைநீர் தேங்கியதால், சம்பா நெற்கதிர்கள் சாய்ந்தன. பல இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்கியதால் நெல்மணிகள் மழைநீரில் நனைந்து சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அம்மாப்பேட்டை

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் கீழ்த்தோப்பு உள்ளிட்ட பல கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்த பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக வயலில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் மழையால் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘

மழைநீரில் மூழ்கி உள்ள நெற்கதிர்கள் முளைக்கவும், அழுகி வீணாகவும் வாய்ப்புகள் உள்ளது. கதிர் முற்றிய நிலையில் மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழைநீர் உடனடியாக வடிந்து செல்ல வசதியாக வடிகால்களை தூர்வார வேண்டும்’ என்றனர்

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தஞ்சை 20, பூதலூர் 17, பட்டுக்கோட்டை 12, மஞ்சளாறு 12, அணைக்கரை 10, மதுக்கூர் 9 திருவிடைமருதூர் 7, பேராவூரணி 6, ஒரத்தநாடு 6, அய்யம்பேட்டை 6, நெய்வாசல் தென்பாதி 6, வெட்டிக்காடு 6, கும்பகோணம் 5, வல்லம் 5, திருவையாறு 4, திருக்காட்டுப்பள்ளி 4, அதிராம்பட்டினம் 3, ஈச்சன்விடுதி 3, பாபநாசம் 3, குருங்குளம் 2.

Next Story