9 மாத வருவாய் இன்றி தவிப்பு: திருமண மண்டபங்களுக்கு ‘சீல்’ வைப்பதை தவிர்க்க வேண்டும்


9 மாத வருவாய் இன்றி தவிப்பு: திருமண மண்டபங்களுக்கு ‘சீல்’ வைப்பதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Jan 2021 6:17 AM IST (Updated: 4 Jan 2021 6:17 AM IST)
t-max-icont-min-icon

9 மாதங்களாக வருவாய் இன்றி பாதிக்கப்படுவதாகவும், திருமண மண்டபங்களுக்கு ‘சீல்‘ வைக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நாகர்கோவில் பி.டி.பிள்ளை திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

இதற்கு சங்க தலைவர் ராமநாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் சிதம்பரதாணு, பொருளாளர் வெங்கட சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கலெக்டர்- அதிகாரிகளுக்கு நன்றி

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கு சங்க உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பது. திருமண மண்டபங்களுக்கு வரும் நபர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து வர வேண்டும். அவ்வாறு வரும் அனைவரின் கைகளிலும் கிருமி நாசினி தெளித்தும், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபிறகுதான் மண்டபத்துக்குள் அனுமதிப்போம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில் முழு நேரம் பணியாற்றும் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தவிர்க்க வேண்டும்

கடந்த 9 மாதங்களாக வருவாய் இன்றி, ஊழியர் சம்பளம், மின் கட்டணம், மண்டப பராமரிப்பு, சொத்துவரி செலுத்த முடியாமல் திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் வாழ்வாதாரம் இழக்க செய்யும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருமண மண்டபங்களுக்கு ‘சீல்‘ வைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. இதனை தவிர்க்கும்படி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Next Story