சாவுக்கு நியாயம் கேட்டு துணி வியாபாரி வீட்டுமுன்பு கணவர் உடலை வைத்து பெண் போராட்டம்


சாவுக்கு நியாயம் கேட்டு துணி வியாபாரி வீட்டுமுன்பு கணவர் உடலை வைத்து பெண் போராட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2021 10:14 AM IST (Updated: 4 Jan 2021 10:14 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவுக்கு வேலைக்குச் சென்ற கணவன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி கணவனின் உடலை துணிவியாபாரி வீட்டின் முன்பு வைத்து குழந்தைகளுடன் மனைவி நியாயம் கேட்டு போராட்டம் நடத்தினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள திம்மனமுத்தூரை அடுத்த குஸ்தம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50). இவர் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் திம்மனமுத்தூரை சேர்ந்த ஜவுளி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் வெங்கடேசனிடம் துணி வியாபாரத்தில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் 14-ந் தேதி வெங்கடேசனை விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் அங்கு வெங்கடேசனுக்கு சரியாக உணவு வழங்காமல் கொடுமைப்படுத்துவதாக வெங்கடேசன் தனது மனைவி அஞ்சலியிடம் செல்போனில் கூறி அழுததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சலி விஜயவாடாவுக்கு சென்று 31-ந் தேதி வெங்கடேசனை தனது ஊருக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று காலை திடீரென இறந்துவிட்டார்.

பிணத்துடன் போராட்டம்

இதனால் தனது கணவர் சாவுக்கு நியாயம் கேட்டு வெங்கடேசனின் உடலை துணி வியாபாரி புருஷோத்தமன் வீட்டின் முன்பு வைத்து, தன்னுடைய குழந்தைகளுடன் நியாயம் கேட்டு முற்றுகையிட்டார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக அஞ்சலி கொடுத்தப்புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story