மாநகராட்சியை கைப்பற்றினால் அவுரங்காபாத் நகரின் பெயரை நாங்கள் மாற்றுவோம் - பா.ஜனதா தலைவர் உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 Jan 2021 6:01 AM IST (Updated: 5 Jan 2021 6:01 AM IST)
t-max-icont-min-icon

அவுரங்காபாத் மாநகராட்சியை கைப்பற்றினால் அந்த நகரின் பெயரை நாங்கள் சாம்பாஜிநகர் என மாற்றுவோம் என பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.

புனே, 

அவுரங்காபாத் நகரின் பெயரை சாம்பாஜி நகர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என சிவசேனா கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது. இதற்காக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் இதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றதால் பெயர் மாற்றம் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் நிலையில், விரையில் அவுரங்காபாத் நகரத்தின் பெயர் சாம்பாஜி நகர் என மாற்றப்படும் என்று சிவசேனா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு மாநில ஆட்சியில் பங்கு வகிக்கும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவுரங்காபாத் பெயர் மாற்றப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என அந்த கட்சி தெரிவித்து உள்ளது. இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இந்த பிரச்சினை ஆளும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பெயர் மாற்ற விவகாரம் குறித்து எதிர்க்கட்சியான பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாம்பாஜிநகர் பெயர் மாற்றம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. பின்னர் ஏன் இந்த பெயர் மாற்றத்தை செய்யாமல் இருக்கவேண்டும்? அவுரங்காபாத் மாநகராட்சியை நாங்கள் கைப்பற்றினால், நிச்சயம் பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என நான் உறுதி அளிக்கிறேன்.

காங்கிரஸ் கட்சி இந்த பெயர் மாற்றத்தை கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் சிவசேனா அரசை நடத்துவதற்கு, காங்கிரசின் ஆதரவு தேவை. இந்த பிரச்சினையில் தங்கள் அதிகாரத்தை செலுத்த முடியுமா என்று சிவசேனா முடிவு செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story