நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் போராட்டம்


நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2021 6:43 AM IST (Updated: 5 Jan 2021 6:43 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே நீர்பிடிப்பு பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி முதியவர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா கொடும்பாளூர் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தியவாதி செல்வராஜ் (வயது 68). சமூக ஆர்வலரான இவர் அந்த பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்் தேதி சென்ற போது அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கால அவகாசம் கேட்டதை அடுத்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற இடைக்கால தடையானை பெற்று விட்டதாக கூறியதாலும், மேலும் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள சிலர் கீரனூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கும் நிலுவையில் இருப்பதாலும் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

செல்ேபான் கோபுரத்தில் ஏறி போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் நேற்று காலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவணக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ரமேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரிடம் பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தனர். அதனைதொடர்ந்து அந்த முதியவர் போராட்டத்தை கைவிடுவதாக கூறியதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் முதியவர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தார். இதையடுத்து முதியவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று மீண்டும் கூறியதையடுத்து அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story