குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தமிழ் புலிகள் கட்சியினர் முற்றுகை
குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்குவார். தற்போது கொரோனா தொற்று காரணமாக இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறாமல் அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றனர்.
மேலும் கலெக்டர் விஷ்ணு பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். காணொலி காட்சி மூலம் கோரிக்கையை சொல்ல இயலாத பொதுமக்கள் அங்குள்ள புகார் பெட்டியில் மனுக்களை போடுகின்றனர்.
முற்றுகை
பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாளையங்கோட்டை சமாதானபுரம் காமராஜ் காலனியில் ஒரு மதுபான கடை மற்றும் பார் திறந்து உள்ளனர். குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறந்து இருப்பது சட்டவிரோதமானது. இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே இந்த கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலப்பாளையம் மேலநத்தம் ஊர் மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் பெருமாள் கிருஷ்ணன் கோவில் கட்ட ஆவணம் செய்ய வேண்டும். அங்குள்ள ரேஷன் கடை முன்பு மேற்கூரை அமைத்து தர வேண்டும். சுடுகாட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story