விவசாயிகள் நலன்கருதி பெரிய சூரியூர், ஓலையூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை


விவசாயிகள் நலன்கருதி பெரிய சூரியூர், ஓலையூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2021 2:07 AM GMT (Updated: 5 Jan 2021 2:07 AM GMT)

விவசாயிகள் நலன்கருதி பெரிய சூரியூர் மற்றும் ஓலையூரில் அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருவெறும்பூர் தாலுகாவுக்குட்பட்ட சூரியூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியசூரியூர் கிராம மக்கள், நவல்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் பெரியசாமி, துணைத்தலைவர் அழகர் ஆகியோர் பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நெல்கொள்முதல் நிலையம்

சூரியூர் ஊராட்சி பெரியசூரியூரை மையமாக கொண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்த நெல்லை, இடைத்தரகர்களிடம் அரசு கொள்முதல் செய்யும் விலையை விட குறைவாக விற்க நேரிடுகிறது. விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையம் செல்ல வேண்டுமானால் 15 கிலோ மீட்டார் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், செலவு அதிகம் ஆகிறது. எனவே, ஏழை விவசாயிகளின் நலன்கருதி பெரிய சூரியூரில் அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ஓலையூர்

இதுபோல முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி திவ்யா சின்னதம்பி, திருமலை சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வைஷ்ணவி பாலசுப்பிரமணி ஆகியோர் கிராம மக்கள் சார்பில் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்கள் ஊராட்சி பகுதியில் உள்ள 20 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்கிறோம். மேட்டுக்கட்டை வாய்க்கால் பாசன வசதி உள்ளது. எனவே, முடிகண்டம் ஊராட்சிக்குட்பட்ட ஓலையூர் கிராமத்தில் பொதுஇடம் உள்ளதால், அங்கு அரசு கொள்முதல் நிலையம் அமைத்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

Next Story